உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  கர்நாடக அரசு மீது உயர் நீதிமன்றம் விளாசல்! 11 பேர் பலி விவகாரத்தில் கடும் அதிருப்தி

 கர்நாடக அரசு மீது உயர் நீதிமன்றம் விளாசல்! 11 பேர் பலி விவகாரத்தில் கடும் அதிருப்தி

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தது பற்றி, கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளது. 'விதான் சவுதா, சின்னசாமி மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் நிகழ்ச்சி நடத்தும்போது மக்கள் கூடுவர் என்று தெரியாதா; அரசு சார்பில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை என்ன?' என நீதிபதிகள், அரசை கடுமையாக விளாசினர். பணியில் அலட்சியமாக செயல்பட்ட காரணத்துக்காக பெங்களூரு சிட்டி போலீஸ் கமிஷனர் தயானந்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.ஆர்.சி.பி., எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐ.பி.எல்., கோப்பையை முதன்முறையாக வென்றதை கொண்டாட, பெங்களூரு விதான் சவுதா, சின்னசாமி மைதானம் ஆகிய இரண்டு இடங்களில், நேற்று முன்தினம் பாராட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விதான் சவுதா முன் நடந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். சின்னசாமி மைதானத்தில் 34,600 பேர் மட்டுமே அமர இருக்கை உள்ள நிலையில், இரண்டு லட்சம் ரசிகர்கள் கூடினர்.மைதானத்திற்குள் கட்டுப்பாடு இல்லாமல் ரசிகர்கள் உள்ளே நுழைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி, ஐந்து பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து பெங்களூரு மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ் தலைமையில், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர் ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.அப்போது நீதிபதிகள், 'பெங்களூரு அணியின் வெற்றியை கொண்டாட, ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்று தெரியாதா? ஒரே நேரத்தில் விதான் சவுதா, சின்னசாமி மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் நிகழ்ச்சி நடத்தியது ஏன்? மாநில அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?' என, சரமாரியாக கேள்வி எழுப்பினர். அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி கூறியதாவது:விதான் சவுதா, சின்னசாமி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக 1,643 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், 789 பேர் சின்னசாமி மைதானத்தை சுற்றி பணியில் இருந்தனர்.மைதானத்தின் 21 நுழைவாயிலும் திறந்திருந்தன. மைதானத்தில், 34,600 பேர் மட்டுமே அமர இருக்கைகள் உள்ளன. ஆர்.சி.பி., அணி நிர்வாகம் சார்பில், 33,000 பேருக்கு பாஸ் வழங்கப்பட்டது.ஆனால், மைதானத்திற்குள் இரண்டரை லட்சம் பேர் வந்துள்ளனர். நுழைவாயில் கேட்டுகளை தள்ளி உள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பெண்கள், ஆறு ஆண்கள் உயிரிழந்து உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'மைதானத்திற்குள் உயிரிழப்பு நடந்ததா?' என கேட்டனர். இதற்கு பதில் அளித்த சசிகிரண் ஷெட்டி, 'மைதானத்திற்குள் இல்லை, வெளியில் தான் உயிரிழப்பு நடந்தது' என்றார்.

66 பேர் காயம்

நீதிபதிகள் கூறுகையில், 'ஒருவேளை கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து அரசிடம் இருந்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டதா; சம்பவம் நடந்தபோது மைதானத்தில் ஆம்புலன்ஸ் இல்லையா' என கேள்வி எழுப்பினர்.'ஆம்புலன்ஸ்கள் இருந்தாலும், கூட்ட நெரிசலில் முன்நோக்கி செல்ல முடியவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருந்தன' என்று சசிகிரண் ஷெட்டி பதிலளித்தார்.மேலும் அவர் கூறியதாவது:விதான் சவுதா முன், அரசு சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சின்னசாமி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சி, ஆர்.சி.பி., அணி நிர்வாகம் சார்பில் நடந்தது. நிகழ்ச்சி மேலாண்மை, பாதுகாப்பை பார்த்துக் கொள்வதாக அவர்கள் கூறியிருந்தனர்.மைதானத்திற்கு பெங்களூரில் இருந்து மட்டுமின்றி மாநிலம் முழுதும் இருந்து மக்கள் அதிகமாக வந்த வண்ணம் இருந்தனர். இச்சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை ஏற்கனவே துவங்கப்பட்டு உள்ளது.கூட்ட நெரிசலில், 66 பேர் காயம் அடைந்துள்ளனர். விசாரணை செயல்முறையை வீடியோ எடுத்து உங்கள் முன்னிலையில் சமர்ப்பிப்போம். இச்சம்பவம் குறித்து மறைப்பது என்ற கேள்விக்கு இடம் இல்லை.இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டு உள்ளது. வரும் நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் இதுபோன்று சம்பவம் ஏற்படாமல் தடுக்க, அரசு வழிகாட்டுதல் வெளியிடும்.இவ்வாறு அவர் கூறினார்.வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'இந்த துயர சம்பவத்திற்கான காரணம் குறித்தும்; எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் எவ்வாறு தடுப்பது என்பதையும் அரசு கண்டறிய வேண்டும்' என்று கூறி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணையை, 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.இதற்கிடையில், 11 பேர் இறந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையமும் களம் இறங்கி உள்ளது. சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துஉள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஏழு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக, பெங்களூரு சிட்டி போலீஸ் கமிஷனர் தயானந்தா உட்பட ஐந்து போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆர்.சி.பி., நிர்வாகம் மீது வழக்கு

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததை, இயற்கைக்கு மாறான மரணம் என்று, கப்பன் பார்க் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கப்பன் பார்க் இன்ஸ்பெக்டர் கிரிஷ் அளித்த புகாரின்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம், டி.என்.ஏ., என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாக கமிட்டி மீது, போலீசார் நேற்று மாலை வழக்குப்பதிவு செய்தனர்.

ஆர்.சி.பி., கேர்ஸ்

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக ஆர்.சி.பி., அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'இந்த துரதிர்ஷ்ட சம்பவம் மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் இருப்பர்' என கூறப்பட்டுள்ளது. காயம் அடைந்த ரசிகர்களின் மருத்துவ தேவைகளுக்காக, 'ஆர்.சி.பி., கேர்ஸ்' என்ற நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kanns
ஜூன் 06, 2025 12:25

Abolish Useless-Biased PowerMisusing MegaLoot AdvocateVested CourtJudges. Police Advised Correctly Not to have Fanatic/ Crowds of Karnataka to have RoadShowEtc Celebrations BUT Cheap Karnataka Politicians incl KRS Chauvinists-etc Stoked Fanaticisms& Permissions for Such Violent Celebrations Just for NameBengalore in RCB, Though Most TeamMemers Were Outsiders. SACK-ARREST-PUNISH ALL Politicians-Officials etc esp PartyHopperPowerMisusing FANATIC STOKER Siddaramaih. SHAME


சமீபத்திய செய்தி