அதிவேக ரயில் போக்குவரத்தால் நாட்டின் பொருளாதார வளம் பெருகும்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ''அதிவேக ரயில் போக்குவரத்தால் நகரங்கள் வளர்வதுடன், தொழில் வளர்ந்து வேலைவாய்ப்புகள் உருவாகும். சம்பளம் அதிகரிப்பதுடன், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,'' என ஆசிய வளர்ச்சி வங்கி நிறுவனத்தின் சிறப்பு வல்லுநர் கூறியுள்ளார்.புல்லட் ரயில் திட்டம்
மும்பை மற்றும் ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே, அதிவேகம் கொண்ட புல்லட் ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவு பெற்று 2027ம் ஆண்டு ஆக.,மாதம் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் திட்டத்தின் மூலம் இந்திய பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.முக்கிய கருவி
இதுகுறித்து ஆசிய வளர்ச்சி வங்கி நிறுவனத்தின் சிறப்பு வல்லுநர் மற்றும் டோக்கியோ பல்கலை கவுரவ பேராசிரியர் சீதாராம் கூறியதாவது: நகரங்களிலும், நகரங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அதிவேக ரயில் என்பது போக்குவரத்து 2.0 எனக் கருதப்படுகிறது. இது வேகமாகவும், பாதுகாப்பாக பயணிக்கவும், பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது. பொருளாதாரத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்பும் நாடுகள், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள், போக்குவரத்து இயக்க பிரச்னையை சரி செய்ய வேண்டி உள்ளது. இதற்கு, நகரங்களுக்கு இடையேயும், நாடுகளுக்கு உள்ளேயும் அதிவேக ரயில் போக்குவரத்து முக்கிய கருவியாக உள்ளது. ஜப்பானின் வரலாறு
அதிவேக ரயில் பயணத்தில் ஜப்பானுக்கு 60 ஆண்டு கால அனுபவம் உள்ளது. விபத்துகளே நடக்காத வகையில் இந்தப் போக்குவரத்தை நடத்திய வரலாறு அந்நாட்டிடம் இருக்கிறது. இந்த முறையைப் பின்பற்றி வெற்றி கண்ட நாடுகள் ஆசியாவில் உள்ளன. சீனா, கொரியா ஆகிய நாடுகளும் இதனைப் பின்பற்றுகின்றன. தற்போது இந்தியாவும் இந்த வழியில் வருகிறது. தற்போது பெரிய பொருளாதாரமான இந்தியா, 2047-க்குள் வளர்ந்த நாடாக மாற விரும்புகிறது. இதற்கு அதிவேக ரயில் போக்குவரத்து தேவை. இதனை ஜப்பானிடம் இருந்து இந்தியா நிறைய கற்றுக் கொள்ள முடியும்.பாதுகாப்பானது
அதிவேக ரயில் போக்குவரத்து என்பது அடர்ந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகள் மற்றும் வளர்ச்சி அடையும் நகரங்களுக்கு இடையே தான் இயக்கப்படும். தற்போது, ஜப்பான் முதலில் கட்டமைத்த அதிவேக ரயில் பாதையை பின்பற்றி இந்தியாவும் மும்பை மற்றும் ஆமதாபாத் இடையே அதிவேக ரயில் பாதையை அமைத்து வருகிறது. இதே முறையை தான் கொரியாவும், சீனாவும் பின்பற்றின. 500 கிமீ., தூரத்திற்கு இடையிலான வான் போக்குவரத்துடன் அதிவேக ரயில் போக்குவரத்து போட்டி போடவும் அதற்கு மாற்றாக இருக்கவும் முடியும். இதன் மூலம் ஏராளமான மக்களை பாதுகாப்பாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்ல முடியும். தொழில் வளர்ச்சி
இதன் மூலம் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும். மக்கள் தொடர்ச்சியாக பயணிக்க முடிவதுடன், 500 கிமீ., தூரத்துக்கு இடையிலான பயணத்தை 2 மணி நேரத்துக்குள் கடக்க முடியும். இது முக்கிய திருப்பு முனையாக இருக்கும். இந்த அதிவேக ரயில் போக்குவரத்தில் இணையும் நகரங்களில் சொத்து மதிப்பு கூடுவதுடன், அந்த நகரங்கள் அசுர வளர்ச்சி பெறும். இத்துடன் பல புதுமைகள் உருவாகி, மக்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படும். இது ஜப்பானின் அனுபவத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவிலும் கொரியாவிலும் இது நிகழ்ந்துள்ளது. அதிவேக ரயில் போக்குவரத்து காரணமாக தொழில் வளர்ச்சி அடையும். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகுவதுடன், அங்கு பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்.1964ல் ஜப்பான் அதிவேக ரயில் போக்குவரத்தை தொடங்கிய போது, அதே ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை துவக்கியது. இந்த போக்குவரத்தை கொண்டு வரும் நாடுகள் ஒலிம்பிக் போட்டியை நடத்தி உள்ளன. இது ஜப்பானில் தொடங்கி ஐரோப்பா வழியாக உலக நாடுகளுக்கு பரவியது. 2029, 2030, 2036 ஆகிய ஆண்டுகளில் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விரும்புகிறது. இதில், அதிவேக ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கும் என்பது இயற்கையே. இதனால், தேசிய கட்டமைப்பை உருவாக்க இந்தியாவுக்கு நம்பிக்கை ஏற்படும். ஏற்றுமதி
உதாரணமாக டில்லியில் 25 ஆண்டுக்கு முன் மெட்ரோ ரயில் போக்குவரத்தை இந்தியா ஏற்படுத்தியது. தற்போது இந்தியாவின் முக்கியமான பல நகரங்களில் மெட்ரோ போக்குவரத்து உள்ளன. அல்லது அதற்கான பணிகள் நடக்கின்றன. அதேபோல் அதிவேக ரயில் போக்குவரத்தும் இந்தியாவில் பெரிய நெட்வொர்க் ஆக அமையும். அது சவாலாக இருந்தாலும் நல்ல துவக்கம் தான். சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். 40 ஆயிரம் கிமீ தூரத்துக்கு அதிவேக ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தி சீனா சாதனை படைத்துள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனாவில் இந்த போக்குவரத்து ஆடம்பரமாக இருக்காது. ஆனால், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும். அதிவேக ரயில் போக்குவரத்தில் கிடைத்த அனுபவத்தை உலக நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவும் அதனை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்