உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 30,000 கிலோ கன்டெய்னர் விழுந்தது எப்படி? 6 பேர் பலியான விபத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

30,000 கிலோ கன்டெய்னர் விழுந்தது எப்படி? 6 பேர் பலியான விபத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களாவில் வால்வோ கார் மீது, 30,000 கிலோ எடை கொண்ட, கன்டெய்னர் லாரி கவிழ, அதன் முன்னாள் சென்ற கார் திடீரென வேகத்தை குறைத்ததே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம், சாங்கிலி மாவட்டம் மோர்பகி கிராமத்தைச் சேர்ந்த சந்திரம் யகேப்பகோல், 48, பெங்களூரில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இங்கு சாப்ட்வேர் நிறுவனத்தை அவர் நடத்தினார்.நேற்று முன்தினம் காலை பேகூர் - நெலமங்களா தேசிய நெடுஞ்சாலையில் தாளகெரே என்ற இடத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து, சந்திரம் யகேப்பகோல் குடும்பத்தின்ர சென்ற கார் கவிழ்ந்தது.இதில் கார் முழுவதும் நசுங்கி அதில் பயணம் செய்த சந்திரம் யகேப்பாகோல், அவரது மனைவி கவுரா பாய், 42, மகள் தீக் ஷா, 12, மகன் ஜியான், 16, சகோதரர் மனைவி விஜயலட்சுமி, 35, இவரது மகன் ஆர்யா, 6, ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.மிக கோரமாக நிகழ்ந்த இந்த விபத்து குறித்து நெலமங்களா போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த விபத்து குறித்து பெங்களூரு ரூரல் எஸ்.பி., சி.கே.பாபா கூறுகையில், ''விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கார் மீது கவிழ்ந்த கன்டெய்னர் ஏறக்குறைய 30 டன் எடை கொண்ட, இரும்பு பொருட்கள் இருந்துள்ளன.''கன்டெய்னர் லாரியின் முன்னாள் சென்ற ஊதா நிற கார் திடீரென வேகத்தை குறைத்துள்ளது. அதன் மீது மோதுவதை தவிர்க்க கன்டெய்னர் லாரி டிரைவர், அதை திருப்பியபோது, சாலைத் தடுப்பு மீது மோதி, கவிழ்ந்ததாக அதன் டிரைவர் கூறி உள்ளார். விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கிறோம்,'' என்றார்.போலீசார் கூற்றுப்படி, 30 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கன்டெய்னர் கவிழ்ந்ததில், மிகவும் பாதுகாப்பான கார் என்று புகழ்பெற்ற வால்வோ கார், அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி கேமராவில் விபத்து தொடர்பான காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த விபத்து தொடர்பான வீடியோ நேற்று சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.அந்த வீடியோவில், கன்டெய்னர் லாரியின் முன்னாள் சென்ற காரை திடீரென மெதுவாக செல்வதும், கார் மீது மோதாமல் இருக்க, கன்டெய்னர் லாரியை டிரைவர் திருப்பியபோது, கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தெளிவாக பதிவாகி இருந்தன.கன்டெய்னர் கவிழ்ந்ததை பார்த்ததும், கார் டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றது தெரிய வந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில், விபத்துக்கு காரணமான காரை போலீசார் தேடி வருகின்றனர்.அதிநவீன வசதிகள் நெலமங்களா விபத்தில் சிக்கிய கார் 'வால்வோ எக்ஸ்சி 90' மாடல். இது மிக பாதுகாப்பான கார்களில் ஒன்று. இந்த காரை அதிக பேர் விரும்பி வாங்குகின்றனர். நிறைய பாதுகாப்பு வசதிகள் உள்ளன. காரில் 7 ஏர் பேக்குகள் உள்ளன. சாலையில் செல்லும்போது ஏதாவது வாகனங்கள் மீது மோதும் நிலை ஏற்பட்டால், எச்சரிக்கை ஏற்படுத்தும். தானியங்கி பிரேக் வேலை செய்யும். இதுபோன்ற பல்வேறு அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. கார் நேராக செல்லும்போது, மரத்திலோ, வாகனங்களிலோ மோதினால் உடனடியாக, ஏழு ஏர்பேக்குகளும் பயணியரை காப்பாற்றும். உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் நெலமங்களா விபத்தில் கார் மீது, கன்டெய்னர் கவிழ்ந்துள்ளது. மிக அதிக எடை விழுந்ததால் துயரம் நேர்ந்துள்ளது.ஜெகதீஷ்,கார் ஷோரூம் விற்பனை பிரதிநிதி,குயின்ஸ் ரோடு

உடல்கள் தகனம்

உயிரிழந்த 6 பேரின் உடல்களும், நெலமங்களா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மூன்று ஆம்புலன்களில் அவர்களின் உறவினர்கள் கேட்டுக் கொண்டபடி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மோர்பகி கிராமமே சோகத்தில் மூழ்கியது. உடல்களை பார்த்து உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இறுதி அஞ்சலி செலுத்திய பின், ஆறு பேரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டது.

கார் வாங்கியதை கொண்டாடிய குடும்பம்

புதிதாக 'வால்வோ எக்ஸ்சி 90' கார் வாங்கியபோது, சந்திரம் யகேப்பகோல் குடும்பத்தினர் கொண்டாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி, காண்போரை கண்கலங்க வைக்கிறது.அந்த வீடியோவில் சந்திரம், தன் மனைவியுடன் கார் சாவியை வாங்குவது, ஷோரூமில் இருந்து காரை வெளியே எடுப்பது, குடும்பத்தினருடன் கார் வாங்கியதை அவர் கொண்டாடுவதும் இடம்பெற்றுள்ளது.

148 பேர் பலி

பெங்களூரு நகரில் இருந்து 17 மாவட்டங்களை பெங்களூரு - புனே தேசிய நெடுஞ்சாலை தான் இணைக்கிறது. இதனால் எப்போதும் இந்த சாலை பரபரப்பாக இருக்கும். குறிப்பாக அதிக லாரிகள் செல்கின்றன.இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, மாநிலத்திலேயே அதிக விபத்துகள் நடந்த பகுதி என்ற பெயரை, நெலமங்களா போக்குவரத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடங்கள் பெற்றுள்ளன.இதுவரை 144 விபத்துகள் நேர்ந்துள்ளன. 148 பேர் இறந்துள்ளனர். நெலமங்களாவில் இருந்து டாபஸ்பேட் வரை, சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாலும், வாகனங்கள் வேகமாக செல்வதாலும், அடிக்கடி விபத்து நடப்பது தெரிய வந்துள்ளது. விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை