உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எரிபொருள் சுவிட்ச் துண்டிக்கப்பட்டதற்கு காரணம் மனித தவறு! ஆமதாபாத் விமான விபத்து குறித்து நிபுணர் விளக்கம்

எரிபொருள் சுவிட்ச் துண்டிக்கப்பட்டதற்கு காரணம் மனித தவறு! ஆமதாபாத் விமான விபத்து குறித்து நிபுணர் விளக்கம்

புதுடில்லி: குஜராத்தின் ஆமதாபாதில் கடந்த மாதம், 'ஏர் இந்தியா' விமானம் விபத்துக்குள்ளானதற்கு, இன்ஜின்களுக்கான எரிபொருள் துண்டிக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த நிலையில், அது மனித தவறால் நடந்திருக்கலாம் என்றும், விசாரணை அறிக்கை அதிக வெளிப்படைத் தன்மையுடன் இருந்திருக்கலாம் என்றும், விமான போக்குவரத்து நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனுக்கு, இரண்டு விமானிகள், 10 பணியாளர்கள், 230 பயணியர் என, மொத்தம் 242 பேருடன், ஏர் இந்தியாவுக்கு சொந்தமான, 'போயிங் 787 - 8 ட்ரீம்லைனர்' இரட்டை இன்ஜின்கள் உடைய விமானம், ஜூன் 12ல் புறப்பட்டது.

கருப்பு பெட்டி

கிட்டத்தட்ட 600 - 800 அடி உயரம் மட்டுமே பறந்த விமானம், சில நொடிகளிலேயே, அருகே உள்ள மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த ஒரேயொரு பயணி தவிர, 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.உலகையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து, ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்துகளை விசாரிக்கும் புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். விமானத்தின் கருப்பு பெட்டியில் பதிவான தரவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள், 15 பக்கங்கள் அடங்கிய முதற்கட்ட விசாரணை அறிக்கையை, மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்தனர்.அதில், 'விமானத்தின் இன்ஜின் 1 மற்றும் இன்ஜின் 2க்கான எரிபொருள், ஒரு வினாடியில் அடுத்தடுத்து துண்டிக்கப்பட்டது. 'இதனால், விமானிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. 'காக்பிட்' எனப்படும் விமானிகள் அறையில், 'எரிபொருளை ஏன் கட் -ஆப் செய்தீர்கள்?' என, ஒரு விமானி மற்றொரு விமானியிடம் கேட்பது பதிவாகி உள்ளது. 'அதற்கு அவர், 'நான் கட் ஆப் செய்யவில்லை' என, பதில் அளிக்கிறார். எனினும், இந்த கேள்வியை யார் கேட்டது என்பது தெரியவில்லை. விபத்துக்கு முன், விமானத்தின் எரிபொருள் சுவிட்சுகள் துண்டிக்கப்பட்டிருந்தன' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, விமானியின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதாகவும், தற்கொலை செய்வதற்காக, வேண்டுமென்றே எரிபொருள் சுவிட்சை விமானி ஒருவர், 'ஆப்' செய்ததாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதற்கு, இந்திய வணிக விமானிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.

விசாரணை அறிக்கை

இந்நிலையில், ஏ.ஏ.ஐ.பி., அறிக்கை தொடர்பாக, விமான போக்குவரத்து நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன் நேற்று கூறியதாவது:விமானத்தின் இரண்டு இன்ஜின்களுக்கான எரிபொருளும் ஒரு வினாடியில் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார கோளாறு காரணமாக எரிபொருள் சுவிட்சுகள் தானாக நகராது. சுவிட்ச் அடிப்பகுதியில் உள்ள ஸ்பிரிங்கை இழுத்த பின்னரே, 'ரன்' அல்லது 'கட் ஆப்' நிலைக்கு நகர்த்த முடியும். எரிபொருள் துண்டிக்கப்பட்டதற்கு மனித தவறே காரணம். மேலும், விமானிகள் அறையில் பதிவான குரல்கள் தொடர்பாக விசாரணை அறிக்கையில் தெளிவு இல்லை. விமானத்தில் இயந்திர சிக்கல்கள் அல்லது மென்பொருள் சிக்கல் இருந்தால், அவசர எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கும்.அப்படி எதுவும் வரவில்லை. இதன்படி, இயந்திர அல்லது மென்பொருள் சிக்கல் இல்லை என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. ஏ.ஏ.ஐ.பி., விசாரணை அறிக்கையில் அதிக வெளிப்படைத்தன்மை இருந்திருக்க வேண்டும். மேலும், பல்வேறு கேள்விகளுக்கு முறையான விளக்கங்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு செய்ய உத்தரவு!

டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:போயிங் 787 மற்றும் 737 விமானங்களில், எரிபொருள் சுவிட்சுகள் முறையாக வேலை செய்கின்றனவா என்பது குறித்து, அனைத்து விமான நிறுவனங்களும் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த பணியை வரும் 21க்குள் முடித்து, அது தொடர்பான அறிக்கையை பிராந்திய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் எந்த அலட்சியமும் கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர், ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் போயிங் 787 மற்றும் 737 விமானங்களை இயக்கி வருகின்றன.

'ஏர் இந்தியா' சி.இ.ஓ., திட்டவட்டம்!

'ஏர் இந்தியா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் நேற்று கூறியதாவது:முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விபத்திற்கு இயந்திர கோளாறோ அல்லது பராமரிப்பு பிரச்னையோ காரணம் என குறிப்பிடவில்லை. இதேபோல் எரிபொருளின் தரத்திலும் எந்த பிரச்னையும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னதாக, எரிபொருள் மாதிரிகள் உட்பட அனைத்து தர பரிசோதனைகளையும் விமானிகள் மேற்கொண்டபின் தான் விமானத்தை இயக்கினர். தற்போது விபத்து தொடர்பான விசாரணை துவக்க நிலையில் தான் உள்ளது. எனவே, முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வராதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ரங்ஸ்
ஜூலை 17, 2025 06:43

தீவிரவாத செயலாக இருக்குமோ? அத்துமீறி காக்பிட் உள்ளே நுழைந்து எரிபொருள் சுவிட்ச் ஆஃப் செய்திருப்பார்களோ? ஆராய வேண்டும்.


Senthoora
ஜூலை 15, 2025 14:24

எப்படியோ உயிர் விட்டவங்க தலையில் போட்டு, பல பேர் வியாபாரத்தை காப்பாற்றி, அப்பாவி மக்களின் இஸுரன்க்கு ஆப்பு வைத்துவிட்டார்கள்.


AaaAaaEee
ஜூலை 15, 2025 12:30

சிம்பிள் terrorism look at CCTVs this should be investigated as terrorism


JaiRam
ஜூலை 15, 2025 12:30

மொத்தத்தில் விமான தயாரிப்பு நிறுவனத்திற்கு கெட்டபெயர் வரக்கூடாது, செத்து போன விமானி வரமாட்டார்கள் என்ற தைரியம்


Balasubramanyan
ஜூலை 15, 2025 11:05

I have seen many comments from experienced pilots of dream liner. They ed it is not the mistake of pilots. This problem was noticed even at 2018. No action from boing and GEC. The problem was observed in many airlines. H


Sudha
ஜூலை 15, 2025 10:11

முன்கூட்டியே முடிவுக்கு வராதீர்கள். ஏதாவது ஒரு முடிவுக்கு சட்டென்று வர வழிவகை செய்யுங்கள்


W W
ஜூலை 15, 2025 09:51

எரிபொருள் சுவிட்ச் ஆப்ஆகருந்தால் டேக் ஆப் பெர்மிஸிவ் Declined, Interlock Active அக ,இருந்திருந்தால் எந்த கோர சம்பவம் நடந்திருக்காது .இது ஒரு பேசிக் ஏற்றார்.


முக்கிய வீடியோ