அயோத்தியில் வசூல் வேட்டை 30 பைக்குகள் பறிமுதல்
அயோத்தி, உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த புகாரில், 30 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.உ.பி.,யின் பிரயாக்ராஜில், ஜன., 13ல் மஹா கும்பமேளா நிகழ்வு துவங்கியதில் இருந்தே, அதன் அருகே உள்ள அயோத்திக்கும் பக்தர்களின் வருகை அதிகரித்தபடி உள்ளது. இதனால், அயோத்தியில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இருசக்கர வாகன கும்பல், ராமர் கோவில் மற்றும் பிற கோவில்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலித்துள்ளனர். 1 கி.மீ., துாரத்துக்கு, 100 ரூபாய் வரை கட்டாய வசூலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து பக்தர்கள் அளித்த புகாரின்படி விசாரித்த போலீசார், அதிக கட்டணம் வசூலித்ததாகக் கூறி, 30 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்தனர்.இதற்கிடையே, ராமர் கோவிலில், வி.ஐ.பி., தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி, சுரேஷ் ஆச்சார்யா என்பவர், 1.80 லட்சம் ரூபாய் ஏமாற்றி விட்டதாக, மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த கவிதா ஷெட்டி என்பவர் அயோத்தி போலீசில் புகார் அளித்தார். இது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.