வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐயோ பாவம்..2028-ல் காங்கிரஸ் கர்நாடகாவில் மண்ணை கவ்வப்போகிறது.
பெங்களூரு: ''வரும் 2028 சட்டசபை தேர்தலில், என் தலைமையிலான அரசு அமையும்,'' என்று, சித்தராமையா முன் சிவகுமார் அதிரடியாக பேசினார். இதன்மூலம், 'நானே அடுத்த முதல்வர்' என்பதை, கட்சியினருக்கு தெளிவுபடுத்தி உள்ளார்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக சிவகுமார் உள்ளார். இருவருக்கும் இடையில் முதல்வர் பதவிக்காக அதிகார போட்டி நடக்கிறது. மேலிடத்தில் நடந்த ஒப்பந்தப்படி வரும் நவம்பரில், முதல்வர் பதவியை சித்தராமையா விட்டு கொடுப்பார் என்ற பேச்சுகளும் சமீபகாலமாக அடிபடுகின்றன. ஆனால், சித்தராமையாவின் மகன் யதீந்திரா, ஆதரவு அமைச்சர்கள் பலரும், 'சித்தராமையாவே ஐந்து ஆண்டுகளும் முதல்வர்' என்று கூறி வருகின்றனர். கடந்த ஆண்டு விஜயநகராவில் நடந்த அரசு நிகழ்ச்சிக்கு பின், 'ஐந்து ஆண்டுகளும் நானே முதல்வர்' என்று சித்தராமையா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 'எங்கள் தலைவர் தான் அடுத்த முதல்வர்' என்று கூறுகின்றனர். சித்தராமையாவுக்கு பின் முதல்வர் பதவியை பிடிக்க நினைப்போர், பட்டியல் நாளுக்கு, நாள் நீண்டு கொண்டே போகிறது.'வரும் 2028 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், தலித் சமூகத்தை சேர்ந்தவருக்கு முதல்வர் பதவி வழங்குவது பற்றி ஆலோசிப்போம்' என்று, இரண்டு நாட்களுக்கு முன், பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறினார். இது காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், கர்நாடக அரசின் மின் துறைக்கு உட்பட்ட மின் பகிர்மான கழக ஊழியர்கள் சங்க வைர விழா, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடந்தது. சித்தராமையா, சிவகுமார், மின் துறை அமைச்சர் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழா மேடையில் சிவகுமார் அமர்ந்திருந்த போது ஊழியர்கள், 'டி.கே., டி.கே.,' என்று கோஷம் எழுப்பினர். சிவகுமாரின் இன்ஷியல் டி.கே., ஆகும். கட்சியினரும், அவரை டி.கே., என்றே அழைப்பர். இந்த நிகழ்ச்சியில், சித்தராமையா முன்பு சிவகுமார் பேசியதாவது: சமூகத்திற்கு ஒளி
நீங்கள், டி.கே., டி.கே., என்று கோஷமிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இந்த கோஷம் இங்குடன் நின்று விட கூடாது. உங்களுக்காக அரசு செய்ததை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். கடந்த 2023 சட்டசபை தேர்தலில் என் தலைமையில் தேர்தலை சந்தித்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. வரும் 2028 தேர்தலிலும் என் தலைமையிலான அரசு அமையும்.கர்நாடக மின் பகிர்மான கழக ஊழியர்களான நீங்கள் விளக்கு போன்றவர்கள். இந்த சமூகத்திற்கு ஒளி கொடுக்கிறீர்கள். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நான்கரை ஆண்டுகள் மின்துறை அமைச்சராக பணியாற்றி உள்ளேன். அப்போது, மாநிலத்தில் 11,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.என் பதவி காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலைக்கு கொண்டு வந்தேன். வெளிநாடுகளுக்கு பயணித்து மின்சார பயன்பாட்டு முறை பற்றி ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தேன். உங்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் பேசினார். வலுவான செய்தி
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையாவின், தீவிர ஆதரவாளராக சிவகுமார் இருந்தார். ஆனால், 2018 தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த பின், இருவருக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது. மாநில தலைவர் பதவியை பெற சிவகுமார் முயன்றார். இதை தடுக்க சித்தராமையா எவ்வளவோ முயற்சித்தார். ஆனால், இறுதியில் சிவகுமாரின் முயற்சி வெற்றி பெற்றது.தேர்தலுக்கு பின்னரும் இருவருக்கும் இடையில் உரசல் இருந்தாலும், வெளியே தெரியாதபடி நடந்து கொள்கின்றனர். சிவகுமார் முதல்வர் ஆவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பது, சித்தராமையாவின் குறிக்கோளாக உள்ளது.நிலைமை இப்படி இருக்கும் போது தான், 'அடுத்த முதல்வர் நான் தான்' என்று சித்தராமையா உள்ளிட்ட தன் எதிர்ப்பாளர்களுக்கு, சிவகுமார் வலுவான செய்தி அனுப்பி உள்ளார் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
ஐயோ பாவம்..2028-ல் காங்கிரஸ் கர்நாடகாவில் மண்ணை கவ்வப்போகிறது.