உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிஎச்.டி., விதிமுறைகளை மீறினால்...: கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை

பிஎச்.டி., விதிமுறைகளை மீறினால்...: கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை

புதுடில்லி: '' பிஎச்.டி., படிப்புக்கான விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என யு.ஜி.சி., அறிவித்து உள்ளது.பிஎச்.டி., படிப்புகளுக்கான விதிமுறைகளை மீறியதாக ராஜஸ்தானில் செயல்படும் மூன்று பல்கலைகள், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாணவர்களை சேர்க்க யு.ஜி.சி., தடை விதித்து உள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிஎச்.டி., பட்டம் வழங்குவதில் நடந்த முறைகேடு தொடர்பாக மூன்று பல்கலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி நிறுவனங்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிச்.டி., படிப்புக்கு மாணவர்களை சேர்க்கக்கூடாது. கடுமையான கல்வி தரத்தை பராமரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்பதை அனைத்து பல்கலைகளுக்கும் தெரிவித்து கொள்கிறோம். இது தொடர்பாக பொது வெளியில், யு.ஜி.சி., அறிக்கை வெளியிட்டு உள்ளது. அனைத்து பல்கலைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி படிப்புகளுக்கு பல்கலையை தேர்வு செய்யும்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, படிப்பு மற்றும் கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம் குறித்து உறுதி செய்ய வேண்டும். உண்மையான அறிவார்ந்த சாதனை மற்றும் ஆராய்ச்சி சிறப்பின் அடையாளமாக பிஎச்.டி., பட்டம் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வதில் யு.ஜி.சி., அர்ப்பணிப்புடன் இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.யு.ஜி.சி., தலைவர் ஜக்தீஷ் குமார் கூறியதாவது: பிஎச்.டி., படிப்புகளில் உயர் தரம் பராமரிக்கப்படுவதை பல்கலைகள் உறுதி செய்ய வேண்டும். யு.ஜி.சி.,யின் பிஎச்.டி., விதிமுறைகளை பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சில பல்கலைகளில் பிஎச்.டி., தரத்தை ஆய்வு செய்து வருகிறோம். விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தவறான கல்வி நிறுவனத்தை தனிமைப்படுத்தி மாணவர்களை சேர்ப்பதை தடுப்பது முக்கியம். இந்திய உயர்கல்வியின் தரம் மற்றும் சர்வதேச அளவிலான நன்மதிப்பு சமரசம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

NAGARAJAN C
ஜன 19, 2025 15:11

இன்றும் பல தமிழக மற்றும் பல வட மாநில பல்கலை கழகத்தில் பல டிகிரி படிப்புகள் மற்றும் பிஎச்டி கூவி கூவி விற்பனை செய்கின்றனர்.கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு லட்சம் வரை.தினமும் வலைத்தளத்தில் இது பற்றிய விளம்பரங்கள் பல வலம் வந்த வண்ணம் உள்ளன.இது பற்றி யூசிஜி சரியான மற்றும் தெளிவான விதிமுறைகளை பின்பற்ற வழி வகுத்தல் வேண்டும்.


பெரிய ராசு
ஜன 17, 2025 00:20

பெரும்பாலான தனியார் பல்கலைக்கழகங்கள் தரமற்ற முனைவர் பட்டம் தருகின்றன மாணவர்களும் அவர்களின் கட்டமைப்பை நம்பி ஏமாறுகின்றனர் , அரசு பல்கலைக்கழகம் மட்டுமே வெளிநாட்டில் ஏற்கப்படுகின்றனர் , இதை நான் சொல்லவில்லை கல்வி கற்ற ஒரு மாணவர் என்னிடம் கூறியது


K.n. Dhasarathan
ஜன 16, 2025 21:26

முதலில் விதி முறைகளை மாற்ற கூடாது. புதிய புதிய விதி முறைகளை தன்னிச்சையாக கொண்டு வருவது ஏற்புடையது அல்ல, எந்த விதி முறைகளையும் பல பல்கலை கழகங்களுடன் கலந்து ஆலோசித்து, கொண்டு வருவதுதான் ஜனநாயகம், சர்வாதிகார நாடு இது அல்ல, அப்படி வந்த விதி முறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம், சும்மா போகிற போக்கில் எதோ விதிகளை கொண்டு வர கூடாது. பிறகு எச்சரிக்கை எதற்கு ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை