உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயிற்சி டாக்டர்கள் உடல்நிலை மோசம் முதல்வர் மம்தாவுக்கு ஐ.எம்.ஏ., கடிதம்

பயிற்சி டாக்டர்கள் உடல்நிலை மோசம் முதல்வர் மம்தாவுக்கு ஐ.எம்.ஏ., கடிதம்

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி டாக்டர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதற்கு கவலை தெரிவித்த ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம், இதில் தலையிடும்படி முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளது.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் செயல்படும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரியில், ஆக., 9ல், பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

வலியுறுத்தல்

இந்த சம்பவத்தில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கிறது. பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டும், பணியிடத்தில் பாதுகாப்பு வழங்கக் கோரியும், கடந்த சில நாட்களாக, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பயிற்சி டாக்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சில மூத்த டாக்டர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பயிற்சி டாக்டர்களின் போராட்டம், ஏழாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. சில பயிற்சி டாக்டர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உண்ணாவிரத பந்தலில் மயங்கி விழுந்த மூன்று பயிற்சி டாக்டர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் தலைவர் ஆர்.வி.அசோகன் நேற்று எழுதிய கடிதம்:பயிற்சி டாக்டர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரமாக போராடி வருகின்றனர்.

கோரிக்கை

இதை நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் திறன், மேற்கு வங்க அரசுக்கு உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில பயிற்சி டாக்டர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜினாமா சர்ச்சை

பயிற்சி டாக்டர்களுக்கு ஆதரவாக கோல்கட்டா அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள், ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இது குறித்து முதல்வர் மம்தாவின் ஆலோசகர் அலபன் பந்யோபத்யாய் கூறுகையில், “அரசு வேலையை ராஜினாமா செய்து கடிதம் அனுப்புவதற்கு ஒரு நடைமுறை உள்ளது. ஆனால், டாக்டர்கள் ராஜினாமா கடிதத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. கடிதங்களின் சில பக்கங்களில் எதுவுமே எழுதப்படாமல் உள்ளன. இவற்றை அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதமாக ஏற்க முடியாது,” என்றார். ராஜினாமா செய்த டாக்டர்கள் கூறுகையில், 'எங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான ஒரு அடையாளமாகத் தான் ராஜினாமா செய்துள்ளோம். மற்றபடி, நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை