உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி காற்று மாசு தரத்தில் முன்னேற்றம்: வாகனங்களுக்கான தடை உத்தரவில் தளர்வு

டில்லி காற்று மாசு தரத்தில் முன்னேற்றம்: வாகனங்களுக்கான தடை உத்தரவில் தளர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் காற்று மாசு குறைந்துள்ளதால், வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தளர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக அளவில் மிகவும் மோசமான காற்று மாசு உள்ள நகரங்களில், டில்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. டில்லியில், காற்றின் தரம் மிக மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவிலேயே கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது.

மூன்றாவது நிலை

இந்நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்த பல புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசின் காற்று தர கண்காணிப்பு அமைப்பு அமல்படுத்தியது. காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியதால், ஜி.ஆர்.ஏ.பி., எனப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின், மூன்றாவது நிலையைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டது.இதன்படி, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்புகளுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக பாடம் எடுக்க உத்தரவிடப்பட்டது. சாலைகள், பாலங்கள் உட்பட அனைத்து அரசு உட்கட்டமைப்பு வசதி கட்டுமானங்களும் நிறுத்தப்பட்டன. மேலும், பி.எஸ்., - 3 மற்றும் பி.எஸ்., - 4 இன்ஜின்கள் உடைய நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் டிரக்குகள் தவிர மற்ற டிரக்குகள் டில்லிக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டன.

வாகன ஓட்டிகள் நிம்மதி

இதற்கிடையே, தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் காற்று தர கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று மாலை 4:00 மணிக்கு காற்றின் தரக் குறியீடு, 339 ஆகவும், மாலை 5:00 மணிக்கு 335 ஆகவும் பதிவாகின. இது, மேலும் குறையும் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜி.ஆர்.ஏ.பி., எனப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின், மூன்றாவது நிலையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், காற்று மாசை கட்டுக்குள் வைக்க, முதல் இரண்டு நிலைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதன் வாயிலாக, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். எனினும், இந்த குறியீடு, காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை தான் குறிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை