சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயற்சி :6 ஆயிரம் நட்சத்திர ஆமைகள் சிக்கின
கொச்சி : கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சில்க் ஏர் விமானத்தின் மூலம், சிங்கப்பூருக்கு கடத்த முயற்சித்த 6,000 நட்சத்திர ஆமைகளை, அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றை கடத்த முயன்ற இருவரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் நெடும்பாசேரியில் கொச்சி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து நேற்று, சிங்கப்பூருக்கு சில்க் ஏர் விமானம் புறப்படத் தயாரானது. அதில் செல்வதற்காக, பயணிகள் விமானத்தில் ஏறத் துவங்கினர். பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, விமானத்தில் ஏற்றப்பட இருந்த இரு பெட்டிகளை, அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் 6,000 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரிந்தது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி, இது தொடர்பாக இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். அதிகாரிகளிடம் சிக்கிய நட்சத்திர ஆமைகளின் விலை, பல லட்ச ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.