ம.பி.,யில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையரிடம் அத்துமீறல்!: நாட்டின் பெயரை கெடுத்த இளைஞர் கைது
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
இந்துார்: மத்திய பிரதேசத்தில், பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த இரண்டு ஆஸ்திரேலிய வீராங்கனையர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த நபரை போலீசார் கைது செய்தனர். நடப்பாண்டுக்கான மகளிர் உலகக்கோப்பைத் கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, 'லீக்' சுற்றின் 26-வது போட்டியில் தென்னாப்ரிக்க அணியுடன் மத்திய பிரதேசத்தின் இந்துாரில் நேற்று மோதியது. இதில் பங்கேற்க வந்த ஆஸ்திரேலிய அணி வீராங்கனையர், மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே உள்ள, 'காபி ஷாப்'பிற்கு அந்த வீராங்கனையர் சென்றனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபர், இரண்டு ஆஸ்திரேலிய வீராங்கனையரை பின்தொடர்ந்து சென்றதுடன் ஒரு வீராங்கனையிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வீராங்கனையர், கூச்சலிட்டதுடன், அணியின் பாதுகாப்பு அதிகாரியின் உதவியையும் நாடினர். அதற்குள் அந்த நபர் தப்பியோடியது தெரியவந்தது. இச்சம்பவத்தை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கமும் உறுதிப்படுத்தியுள்ளது. ம.பி., கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் உதவியுடன் ஆஸி., அணி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதன்படி, போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், பாதிக்கப்பட்ட இரண்டு வீராங்கனையரிடமும் உதவி போலீஸ் கமிஷனர் ஹிமானி மிஸ்ரா வாக்குமூலம் பெற்றார். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, பைக்கில் வந்த நபர், ஆசாத் நகரைச் சேர்ந்த அகில் கான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர, ஆஸி., வீராங்கனையருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும், ம.பி., அரசு ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, ஆஸி., வீராங்கனையருக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைதளத்தில் உத்தவ் சிவசேனா பிரிவு எம்.பி., பிரியங்கா சதுர்வேதி குறிப்பிடுகையில், 'இது, நம் நாட்டிற்கே அவமானத்தை தரக்கூடிய செயல். பொருளாதார வளர்ச்சியைப் பற்றி மத்திய அரசு பெருமையாக பேசி வரும் நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. இது ஒரு வெட்கக்கேடான செயல்' என குறிப்பிட்டுள்ளார். பி.சி.சி.ஐ., வருத்தம் இச்சம்பவத்திற்கு, பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் செயலர் தேவஜித் சாஹிகியா கூறுகையில், “ஆஸ்திரேலிய வீராங்கனையருக்கு நிகழ்ந்த சம்பவம், துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற நிகழ்வுகள், நம் நாட்டின் மீது அவப்பெயரை ஏற்படுத்துகின்றன. இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட நபரை பிடித்த ம.பி., போலீசாரை வெகுவாக பாராட்டுகிறோம். கைதான நபருக்கு, சட்டத்தின் வாயிலாக உரிய தண்டனை கிடைக்க செய்ய வேண்டும்,” என்றார். இதேபோல் ம.பி., கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கை: ஆஸி., வீராங்கனையருக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவம், அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. எந்தவொரு பெண்ணுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறக்கூடாது. பாதிக்கப்பட்ட வீராங்கனையருக்கு நாங்கள் துணைநிற்போம். இதற்கிடையே, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்றுள்ள அவர்களின் மன தைரியத்தையும், உறுதியையும் நாங்கள் பாராட்டுகிறோம். ஒரு தனிநபரின் செயலால், நாட்டிற்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது வேதனையை அளிக்கிறது. இச்சம்பவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.