உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகரிக்கும் காற்று மாசு; அவதிப்படும் மக்கள்

அதிகரிக்கும் காற்று மாசு; அவதிப்படும் மக்கள்

புதுடில்லி: தலைநகர் டில்லியில் வெப்பநிலை குறையத் துவங்கி, காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இதனால் கண் எரிச்சல், தூக்கமின்மை, மூச்சு விடுவதில் சிரமம் என பல்வேறு உடல் உபாதைகளால் தேசிய தலைநகரில் வசிக்கும் ஏராளமானோர் அவதிப்படுகின்றனர். டில்லியில் குறைந்த பட்ச வெப்பநிலை நேற்று, 16.9 டிகிரி, அதிகபட்சமாக 32 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட இரண்டு டிகிரிகள் குறைவு என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இன்று குறைந்த பட்ச வெ-ப்பநிலை 17, அதிக பட்சமாக 31 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும் என கணித்துள்ளது. காற்றின் தரக்குறியீடு நேற்று மாலை 4:00 மணிக்கு ஆனந்த் விஹாரில் 415ஆகவும், வஜிராபாதில் 405 ஆகவும் பதிவாகி இருந்தது. இது, அபாயகரமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மாலை 5:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 89 சதவீதமாக இருந்தது. அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் பஞ்சாபிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. ஹரியானாவின் பதேஹாபாதில் காற்றின் தரக் குறியீடு நேற்று மாலை 4:00 மணிக்கு 329 ஆக பதிவாகி இருந்தது. பகதூர்கர் - 324, தருஹேரா - 307, பானிபட் - 306, சர்கி தாத்ரி - 292, குருகிராம் - 234, ஜிந்த் - 293, கைத்தால் - 283, சோனிபட் - 214, மானேசர் - 291, யமுனா நகர் - 226ஆக காற்றின் தரக்குறியீடு பதிவாகி இருந்தது. அதேபோல, பஞ்சாப் மாநிலம் பதிண்டா - 227, லூதியானா - 206, ஜலந்தர் - 158, கன்னா - 144, அமிர்தசரஸ் - 126, பாட்டியாலா - 122 மற்றும் ரூப்நகர் - 153 என காற்றின் தரக்குறியீடு பதிவாகி இருந்தது. காற்றின் தரக்குறியீடு 301 - 400 மிகவும் மோசமான நிலையாகவும், 401 - 450 மற்றும் 450க்கு மேல் காற்றின் தரக்குறியீடு பதிவானால் அது அபாயகரமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ளது. டில்லி, குருகிராம், நொய்டா, பரிதாபாத் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு நடத்திய, 'லோக்கல் சர்க்கிள்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், 'தொண்டை வலி, இருமல், கண் எரிச்சல், தலைவலி மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றால் ஏராளமான மக்கள் அவதிப்படுகின்றனர்' என கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை