உலகின் முன்னணி நாடாகும் இந்தியா: சைப்ரஸ் வெளியுறவு அமைச்சர் பேச்சு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: “உலகின் வளரும் நாடுகளில் முன்னணி நாடாக இந்தியா உள்ளது. எங்கள் நாட்டின் நீண்டகால நட்பு நாடு என்பதுடன், எதிர்கால ஒத்துழைப்புக்கான கூட்டாளியாகவும் இந்தியாவை கருதுகிறோம்,” என, சைப்ரஸ் வெளியுறவு அமைச்சர் கான்ஸ்டான்டினோஸ் கோம்போஸ் தெரிவித்துள்ளார். மேற்காசிய நாடான சைப்ரசின் வெளியுறவு அமைச்சர் கோம்போஸ், மூன்று நாள் அரசுமுறை பயணமாக நம் நாட்டிற்கு கடந்த மாதம் 29ல் வந்தார். இவர் டில்லியில் நேற்று நடந்த நிகழ்வில் பேசியதாவது: ஐரோப்பிய யூனியனுடன், இந்தியா மேற்கொள்ள உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் மகத்தான பொருளாதார வாய்ப்பு ஏற்படுத்தப்படும். உலகம் முழுதும் நிச்சயமற்ற சூழல் நீடிக்கும் நிலையில், நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை பலப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. பொருளாதார மந்தநிலை, கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்பு உள்ளிட்டவை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதேபோல் மேற்காசிய நாடான இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடத்தும் தாக்குதல், செங்கடலில் ஹவுதி படையினரால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் போன்றவையும் பொருளாதார ரீதியில் பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன. இச்சூழலில், இந்தியாவை ஓர் இயற்கை கூட்டாளியாகவும், நட்பு நாடாகவும் நாங்கள் பார்க்கிறோம். உலகளவில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்து வருவதால், எதிர்கால ஒத்துழைப்புக்கான கூட்டாளியாகவும் பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்து பேசிய சைப்ரஸ் வெளியுறவு அமைச்சர் கோம்போஸ், இரு நாடுகளுக்கு இடையே கூட்டு நடவடிக்கை திட்டம் 2025 - 29 செயல்பாட்டுக்கு கொண்டு வருவது பற்றியும் ஆய்வு நடத்தி னார்.