உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - பிஜி இடையே கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த திட்டம்

இந்தியா - பிஜி இடையே கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த திட்டம்

புதுடில்லி : இந்தியா - பிஜி இடையே பாதுகாப்பு உறவை வலுப்படுத்த இரு நாடுகளும் விரிவான திட்டத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளன. தென் பசிபிக் நாடான பிஜியின் பிரதமர் சிட்டிவேனி லிகமமடா ரபுகா, முதல் முறையாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். மூன்று நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்த ரபுகாவுக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

7 ஒப்பந்தங்கள்

இதைத்தொடர்ந்து நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ரபுகா, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினார். அப்போது, இந்தோபசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக்கு பிஜி முக்கியமான நாடாக உள்ளது. பசிபிக் பிராந்தியத்தில், தங்கள் ஆளுமையை விஸ்தரிப்பதற்கான முயற்சியில் சீனா ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போட பிஜியுடனான நல்லுறவு இந்தியாவுக்கு பெரிதும் பயன்படும். இதனால், அந்நாட்டுடன் பாதுகாப்பு உறவை விரிவாக்கும் முயற்சியை இந்தியா முன்னெடுத்துள்ளது. இதன் பலனாக இரு நாட்டுக்கும் இடையே மருத்துவம், திறன் மேம்பாடு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஏழு முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

விரிவான திட்டம்

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்கு பின், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: பாதுகாப்பு மற்றும் ராணுவத் துறையில் பரஸ்பர கூட்டுறவை வலுப்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதற்காக விரிவான அதிரடி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிஜியின் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான பயிற்சிகள் அளித்து, ராணுவ தளவாடங்களையும் இந்தியா வழங்கும். வளரும் நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை உள்ளடக்கிய பாதுகாப்பு, வர்த்தக வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. அதேபோல் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் இரு நாடுகளும் பங்காற்றும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அன்பளிப்பு

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய பிஜியில் இயங்கும் துாதரகத்தில் பாதுகாப்புக்கான பதவி உருவாக்கப்படும் என, இந்தியா அறிவித்துள்ளது. பிஜி நாட்டின் வளர்ச்சிக்காக 12 விவசாய டிரோன்கள் மற்றும் இரு நடமாடும் மண் பரிசோதனை கூடத்தை அன்பளிப்பாக வழங்கப் போவதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியா - பிஜி சார்பில் ஐ.நா., சபையில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அழுத்தம் தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐ.நா., சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு முழு ஆதரவு தரவும் பிஜி சம்மதித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ