இந்தியா எங்கள் நெருங்கிய கூட்டாளி; மாலத்தீவு அதிபர் முய்சு இணக்கம்
மாலே: சீன ஆதரவு நிலைப்பாட்டால் இந்தியாவுடன் முறைத்துக் கொண்டிருந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, “இந்தியா எங்கள் நெருங்கிய கூட்டாளி,” என இணக்கம் காட்டியுள்ளார். இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது முய்சை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இரண்டாம் நாளாள நேற்று, மாலேவில் உள்ள குடியரசு சதுக்கத்தில் நடந்த அந்நாட்டின் 60வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அணிவகுப்பு மரியாதை மற்றும் நிகழ்ச்சிகளை பார்வையிட்ட மோடி, பின் அந்நாட்டு துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீப், அந்நாட்டு பார்லிமென்டின் சபாநாயகர் அப்துல் ரஹீம் அப்துல்லா, முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். மாலத்தீவு தலைவர்களுடனான சந்திப்பு குறித்து மோடி தன் சமூக வலைதள பதிவில், 'மாலத்தீவு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் பல துறைகளில், இந்தியா - மாலத்தீவு தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல் படுகின்றன. 'மாலத்தீவில் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த கூட்டாண்மையை ஆழப்படுத்தவும், உறவை வலுப்படுத்தவும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்' என, குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து, சீன ஆதரவாளரான மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடி பயணம் குறித்து கூறுகையில், “இந்தியா எங்கள் நெருங்கிய கூட்டாளி. ''பிரதமர் மோடியின் வருகைக்கு பின், அது இன்னும் சிறப்பாக உள்ளதாக நம்புகிறேன். இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைவதை மாலத்தீவு ஆவலுடன் எதிர்நோக்குகிறது,” என்றார்.