10 ஆண்டு ராணுவ ஒப்பந்தம்: இந்தியா - அமெரிக்கா கையெழுத்து
கோலாலம்பூர்: மலேஷியாவில் நடந்த, 'ஆசியான்' உறுப்பு நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மாநாட்டில், இந்தியா - அமெரிக்கா இடையே, 10 ஆண்டுகளுக்கான ராணுவ செயல்பாட்டு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. 'ஆசியான்' எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்த முறை மலேஷியா வசம் உள்ளது. மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில், 'ஆசியான்' மாநாடு நடந்து வருகிறது. சமீபத்தில் இதன் முதன்மை மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாக பங்கேற்றார். பிரதமர் மோடி, 'ஆன்லைன்' வாயிலாக உரையாற்றினார். 'ஆசியான்' ராணுவ அமைச்சர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத் ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டுக்கு இடையே இரு அமைச்சர்களும் சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில், இந்தியா - அமெரிக்கா இடையே, 10 ஆண்டுகளுக்கான ராணுவ செயல்பாட்டு ஒப்பந்தத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் மற்றும் பீட் ஹெக்சேத் கையெழுத்திட்டனர். தளவாடங்கள் மற்றும் சேவைகள் பகிர்வு, கூட்டு உற்பத்தி, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் மூன்று முக்கிய நோக்கங்களாக உள்ளன. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு விரிவடைந்து வருகிறது. அதை எதிர்கொள்வதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளும் தங்கள் ராணுவ தளங்கள், பராமரிப்பு மையங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் பயிற்சி மையங்களை பரஸ்பரம் பகிர்ந்து பயன்படுத்தும் வாய்ப்பு பெறும். மேலும், இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவின் மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பங்களை நீண்ட காலத்திற்கு நம்மால் பயன்படுத்த முடியும். இது, நம் உள்நாட்டு ராணுவ உற்பத்தி மற்றும் நவீனமயமாக்கலை வலுப்படுத்தும். ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத் வெளியிட்ட அறிக்கையில், '10 ஆண்டுகால ராணுவ ஒப்பந்தம் பிராந்திய நிலைத்தன்மைக்கும், பாதுகாப்பிற்கும் முக்கிய அடித்தளமாக அமையும். இரு நாடுகளின் ராணுவ உறவு இதுவரை இல்லாத அளவு வலுவடைந்துள்ளது' என கூறினார்.