உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சைபர் மோசடி கும்பலிடமிருந்து தப்பிய இந்தியர் நாடு திரும்பினர்

சைபர் மோசடி கும்பலிடமிருந்து தப்பிய இந்தியர் நாடு திரும்பினர்

புதுடில்லி: மியான்மரில், 'சைபர் கிரைம்' மோசடி மையத்திலிருந்து தப்பி, தாய்லாந்தில் தஞ்சமடைந்த இந்தியர்களில், 197 பேர் அடங்கிய இரண்டாம் கட்ட குழுவினர், அந்நாட்டு துாதரக அதிகாரிகளின் உதவியுடன் இந்தியா அழைத்து வரப்பட்டனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஏஜென்ட்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி, தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மருக்கு இந்தியர்கள் வேலைக்காக சென்றனர். இவர்கள் மியாவாடி நகரில் உள்ள கே.கே.பார்க்கில் உள்ள சைபர் கிரைம் மோசடி மையங்களில் சிக்கிக் கொண்டனர். வேலைக்காக சென்ற அப்பாவிகள் மிரட்டப்பட்டு, பல்வேறு சைபர் கிரைம் மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். கடந்த மாத இறுதியில், இங்குள்ள மையங்களில் மியான்மர் நாட்டு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 28 நாடுகளைச் சேர்ந்த 1,500 பேர் மியாவாடி நகரத்தில் இருந்து தப்பி, மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தின் எல்லை நகரமான மே சோட்டில் தஞ்சம் அடைந்தனர். சட்டவிரோதமாக தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததாக கூறி, தாய்லாந்து அதிகாரிகள் இவர்களை தடுத்து கைது செய்தனர். தப்பியவர்களில், இந்தியாவைச் சேர்ந்த, 500 பேரும் அடங்குவர். இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி வெளியுறவுத்துறைக்கு உத்தரவிட்டார். இதன்படி, முதல்கட்டமாக கடந்த 6ம் தேதி, 26 பெண்கள் உட்பட, 270 பேர் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக நேற்று, 197 பேர் விமானப்படை விமானம் வாயிலாக இந்தியா அழைத்து வரப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kalyanaraman
நவ 11, 2025 08:53

இவர்களை அனுப்பிய இந்தியாவில் உள்ள ஏஜென்ட்களை சுட்டுக் கொல்ல வேண்டாமா?? இவர்களை விட்டு வைத்தால் இதுபோல பல்லாயிரம் பேர்களை அனுப்பி கொண்டே தான் இருப்பார்கள்.


சமீபத்திய செய்தி