UPDATED : டிச 25, 2025 05:59 PM | ADDED : டிச 25, 2025 05:37 PM
புதுடில்லி : இந்தியாவில் பெட்ரோல் பங்க்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, நவம்பர் மாத இறுதியில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 266 பெட்ரோல் பங்க்கள் உள்ளன. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக அதிக பெட்ரோல் பங்க் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்களில் 90 சதவீதம் ஐஓசி, பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு சொந்தமானவை. தனியார் நிறுவனங்களை பொறுத்த வரை அதிகபட்சமாக, ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் ஆதரவு பெற்ற நயாரா எரிசக்தி நிறுவனம் நாடு முழுவதும் 6,921 பெட்ரோல் பங்குகளை வைத்துள்ளது. ரிலையன்ஸ் மற்றும் பிபி இணைந்து 2,115 பங்குகளையும், ஷெல் 346 பங்க்களையும் வைத்துள்ளது.எரிசக்தி துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரப்படி 2015 ல் 50,451 பெட்ரோல் பங்க்கள் இருந்தன. அதில் , 2967 தனியாருக்கு சொந்தமானவை. அப்போது 5.9 சதவீதமாக இருந்த எண்ணிக்கை தற்போது 9.3 சதவீதமாக அதிகரித்தது.பெட்ரோல், டீசலை சில்லறை விற்பனைக்கு கடந்த 2004 ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. முதல்முறையாக 27 பங்க்கள் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்தியாவை பொறுத்த வரை எரிபொருட்களின் விலை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், இந்த துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. சந்தை விலைக்கு ஏற்ப விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும், எண்ணெய் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதன் மூலம் விலை நிர்ணயத்தின் பின்னணியில் அரசு உள்ளது.உலகத்தின் 3வது மிகப்பெரிய பெட்ரோல் பங்க்கள் கட்டமைப்பை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. 2024 ம் ஆண்டு புள்ளி விவரப்படி அமெரிக்காவில் சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 1,96,643 ஆக உள்ளது. அடுத்த இடத்தில் சீனா உள்ளது. கடந்தாண்டு, 1,15,228 விற்பனை நிலையங்கள் செயல்பட்டன.