ஐ.ஏ.எஸ்., ரோகிணி மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார் ஐ.பி.எஸ்., ரூபா
பெங்களூரு; ஐ.ஏ.எஸ்., ரோகிணி சிந்துாரி மீது, ஐ.பி.எஸ்., ரூபா அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.கர்நாடக விவசாயத் துறை சிறப்பு செயலர் ஐ.ஏ.எஸ்., ரோகிணி சிந்துாரி, 40. இவர் மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்தபோது, ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் மகேஷுடன் மோதல் போக்கை கடைபிடித்தார்.அப்போது மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் முன்னிலையில், ரோகிணி, மகேஷ் இடையே சமரச பேச்சு நடத்தப்பட்டது.இதுதொடர்பான படங்களை, ஐ.பி.எஸ்., ரூபா, 49, தன் 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவேற்றினார். அத்துடன் ரோகிணியின் சில தனிப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டார்.இதற்கு பதிலடியாக, 'ரூபா மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் விரைவாக மீண்டு வரட்டும்' என, ரோகிணி பதிவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. தலைமைச் செயலர் குறுக்கிட்டும், பிரச்னை முடிவுக்கு வரவில்லை.ரூபா மீது உயர்நீதிமன்றத்தில், ரோகிணி அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ரூபாவிடம் விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரூபா மேல்முறையீடு செய்தார். இருவரும் சமரசமாக போகும்படி, உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. அதற்கு இருவருமே தயாராக இல்லை.இதையடுத்து இரு அதிகாரிகளின் பணியும் பறிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். ஏழு மாதங்கள் கடந்த நிலையில் இருவருக்கும் பணி ஒதுக்கப்பட்டது.கடந்த சில வாரங்களாக அமைதியாக இருந்த ரூபா, பெங்களூரு 7வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரோகிணி மீது அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.'எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக, ரோகிணி பதிவிட்ட கருத்தால், என் குடும்பத்தினரின் நிம்மதி போய்விட்டது. மன உளைச்சலுக்கு ஆளாகினர். அந்த பதிவை 1.80 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த சமூகத்தில் என் பெயருக்கு அவபெயர் ஏற்பட்டுள்ளது. இதனால் ரோகிணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனுவில் ரூபா கூறி உள்ளார்.அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுகொண்ட நீதிமன்றம், ரோகிணிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.