சாதாரண வழக்குகளுக்கு ஜாமின் இழுத்தடிப்பதா? சுப்ரீம் கோர்ட் வேதனை
புதுடில்லி, மிக சாதாரண வழக்குகளில் கூட விசாரணை முழுமையாக முடிந்த பின்னும், விசாரணை நீதிமன்றங்கள் ஜாமினை நிராகரிப்பது வருத்தம் அளிப்பதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.குஜராத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும், இவரது ஜாமின் மனுக்களை விசாரணை நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் சிறையில் உள்ளார்.இதையடுத்து, ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:ஒரு ஜனநாயக நாடு, போலீஸ் அரசைப் போல செயல்படக் கூடாது. உண்மையான காரணமும், தேவையுமின்றி, தனிநபர்களை விசாரணை அமைப்புகள் கைது செய்யக்கூடாது.கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், சிறிய வழக்குகளின் ஜாமின் கோரும் மனுக்கள் மிகவும் அரிதாகவே உயர் நீதிமன்றம் வரை வரும். ஆனால் இன்றோ, விசாரணை நீதிமன்ற அளவிலேயே முடிய வேண்டிய வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை வருகின்றன. இது, நீதித்துறையின் சுமையை கூட்டுகிறது.மாஜிஸ்திரேட்களால் முடித்து வைக்கப்பட்டிருக்க வேண்டிய ஜாமின் வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை வருவது துரதிர்ஷ்டவசமானது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய சரியான நேரத்தில் ஜாமின் கிடைப்பதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர்.