உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா என்ன தர்மசாலையா? இலங்கை தமிழர் கோரிக்கை நிராகரிப்பு!

இந்தியா என்ன தர்மசாலையா? இலங்கை தமிழர் கோரிக்கை நிராகரிப்பு!

புதுடில்லி : இலங்கையில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதால் அடைக்கலம் கேட்கும் இலங்கைத் தமிழரின் கோரிக்கையை ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 'ஏற்கனவே, 140 கோடி பேருடன் திணறுகிறோம். அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு? இந்தியா என்ன தர்மசாலையா, ' என, கேள்வியும் எழுப்பியது.நம் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர், விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என, 2015ல் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த தமிழகத்தில் உள்ள நீதிமன்றம், 2018ல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் அவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

ஏற்க முடியாது

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2022ல், அதை ஏழு ஆண்டு சிறை தண்டனையாக குறைத்தது. தண்டனைக் காலம் முடிந்தவுடன், இலங்கைக்கு செல்ல வேண்டும் என்றும், அந்த நடவடிக்கை முடியும் வரை, அகதிகள் முகாமில் இருக்க வேண்டும் எனவும், உத்தரவில் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், தன் மனைவி மற்றும் மகன் இந்தியாவில் உள்ளதாலும், சொந்த நாட்டில் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாலும், இந்தியாவில் அடைக்கலம் கேட்டு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த, நீதிபதிகள் திபாங்கர் தத்தா, வினோத் சந்திரன் அடங்கிய உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு:இந்தியா என்ன தர்மசாலையா, சர்வதேச அகதிகளை ஏற்பதற்கு? ஏற்கனவே, 140 கோடி பேருடன் திணறி வருகிறோம். இதில் சர்வதேச அகதிகளை ஏற்க முடியாது.

எப்படி பொருந்தும்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 மற்றும் 19வது பிரிவின் கீழ், பாதுகாப்பாக வாழ்வதற்கு உரிமை உள்ளது. இவருக்கு எப்படி பொருந்தும்; அது இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும். இலங்கையில் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றால், வேறு நாட்டுக்கு செல்ல வேண்டியதுதானே.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே, ரோஹிங்யா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்பது தொடர்பான வழக்கிலும், இதே நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுத்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை