ஜம்மு - காஷ்மீர் வரைபடம் மன்னிப்பு கேட்டது இஸ்ரேல்
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதி யாகவும், வடகிழக்கு மாநிலங்களை நேபாளத்தின் ஒரு பகுதியாகவும் வரைபடம் வெளியிட்டதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, இஸ்ரேல் அரசு மன்னிப்பு கோரியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு துணை நிற்கும் ஈரான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதற்கிடையே, உலக நாடுகளின் வரைபடத்தை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவ அமைச்சகம், 'ஈரான் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல். இது வெறும் ஒரு துவக்கம் மட்டுமே. நடவடிக்கை எடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை' எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த வரைபடத்தில், ஜம்மு - காஷ்மீர் பகுதி பாகிஸ்தானுடன் இருப்பதைப் போல குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இந்த வரைபடத்தை வெளியிட்டு, 'ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். 'எல்லா வரைபடத்திலும், அவை அப்படியே சித்தரிக்கப்பட வேண்டும்' என, பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் இஸ்ரேல் ராணுவ அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.'பிராந்தியத்தை குறிப்பிடுவதற்காக மட்டுமே இந்த உலக வரைபடம் பகிரப்பட்டுள்ளது. இதில், எல்லைகள் துல்லியமாக காட்டப்படவில்லை. ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளது.