உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெற்கு காசாவில் இஸ்ரேல் படை தாக்குதல் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மீறியதாக புகார்

தெற்கு காசாவில் இஸ்ரேல் படை தாக்குதல் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மீறியதாக புகார்

டெல் அவிவ்: காசாவின் ரபா பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ள இஸ்ரேல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் தரப்பு மீறியதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே, கடந்த இரு ஆண்டுகளாக சண்டை நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சித்தன. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு, 20 அம்ச திட்டத்தை வலியுறுத்தியதை அடுத்து, சில நாட்களுக்கு முன் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், காசாவில் ஹமாஸ் மற்றும் உள்ளூர் அமைப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளது. போரின் போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளூர் அமைப்பினர் செயல்பட்டதாக கூறி, எட்டு பேருக்கு ஹமாஸ் தரப்பில் துாக்கு தண்டனை சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. அங்கிருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹமாஸ் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதையடுதது, 'காசா மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால், ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை' என, டிரம்ப் எச்சரித்து இருந்தார். 'ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிடாத வரை காசாவில் போர் நிற்காது' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துஇருந்தார். இந்நிலையில், காசாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ரபா என்னும் இடத்தில், இஸ்ரேலிய படைகள் நேற்று தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடித்தாகவும், வேறு சில இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளன. இதை இஸ்ரேல் ராணுவமும் உறுதி செய்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இஸ்ரேல், போர் நிறுத்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. ஹமாஸ் கீழ் செயல்படும், காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம், 'இஸ்ரேல் வீசிய பீரங்கி குண்டுகள் தாக்கி நான்கு குழந்தைகள் உட்பட, 18 பேர் கொல்லப்பட்டனர்' என, தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை