ஜெகன் சொத்துக்கள் குறித்து மூன்றாவது நாளாக சோதனை
ஐதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துக்கள் தொடர்பாக சி.பி.ஐ., போலீசார் மூன்றாவது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஏபிஐஐசி- இமார் இடையேயான நில விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டதாகவும் சி.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் இந்த வழக்கில் கைது ஏதும் இருக்குமா என்பதை கூற மறுத்து விட்டார். ஐதராபாத் மண்டல சி.பி.ஐ., கூடுதல் இயக்குநர் வி வி லஷ்மி நாராயண கூறுகையில், ஜெகன் சொத்துக்கள் தொடர்பாக வங்கி ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார். மேலும் அவர் பெங்களூருவில் சோதனை முடித்து விட்டதாகவும், ஐதராபாத்தில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு சோதனை நடைபெறக்கூடும் என தெரிவித்தார். ஐதராபாத்தில் இன்று 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.