ஜம்மு - காஷ்மீர் மேக வெடிப்புக்கு... 11 பேர் பலி! : தெலுங்கானா முதல் பாக்., வரை வெள்ளப்பெருக்கு
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட 11 பேர் நேற்று பலியாகினர். தெலுங்கானா, குஜராத், ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு - காஷ்மீர் என தொடரும் கனமழையின் பாதிப்பு, நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் எதிரொலித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில், கடந்த 15 நாட்களாக மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 26ம் தேதி, ரியாசி மாவட்டத்தில் மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 34 பேர் பலியாகினர். இந்நிலையில், ரியாசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை மீண்டும் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டியது; ஒருசில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. படேர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மலைப்பாதையில் இருந்த வீடு ஒன்று மண்ணில் புதைந்தது. இதில், அந்த வீட்டில் இருந்த ஐந்து குழந்தைகள் உட்பட ஏழு பேர் பலியாகினர். உள்ளூர் மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் இறந்தவர் களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. மீட்பு பணி ராம்பன் மாவட்டம் ராஜ்கரில், மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், வீடுகள், கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. பள்ளிக்கூடம் ஒன்று சேதமடைந்தது. வெள்ளத்தில் சிக்கி ராஜ்கரை சேர்ந்த இரு சகோதரர்கள் உட்பட நான்கு பேர் பலியாகினர். பல மணி நேர தேடுதலுக்கு பின், நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமானவர்களை தேடும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. வெள்ளத்தில் மேலும் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், துணை ராணுவப் படையினர், போலீசார் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் அனைத்தும் உடனடியாக செய்யப்படும் என, ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உறுதியளித்துள்ளார். முதல்வர் ஒமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 15 நாட்களாக கொட்டி வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 130 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், 140 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஜம்மு - காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்து துண்டிப்பு தொடர் கனமழை காரணமாக, ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை ஐந்தாவது நாளாக மூடப்பட்டுள்ளது. உதம்பூர் மாவட்டத்தில் ஜகேனி - செனானி இடையே சாலைகள் சேதம் அடைந்துள்ளதால், 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜம்மு, கதுவா, ரஜோரி, ரியாசி, தோடா, சம்பா மற்றும் உதம்பூரில் இன்று கனமழை பெய்யும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில், 10 நாட்களுக்கு மேலாக தொடரும் கனமழைக்கு, இதுவரை இருவர் பலியாகியுள்ளனர். இதுவரை, 1,093 கி.மீ., துாரத்துக்கு சாலைகள் சேதமடைந்துள்ளதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் தொடரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக, ஆண்டுதோறும் நடக்கும் மணிமகேஷ் யாத்திரை தடைபட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி, 10க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால், அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. உத்தராகண்ட், குஜராத் என பல்வேறு மாநிலங்களில் மேகவெடிப்பு காரணமாக மழை கொட்டி வருகிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் கனமழை கொட்டி வருகிறது. மேலும், நம் நாட்டில் பெய்யும் மழை வெள்ளம், பாகிஸ்தான் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.