உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நோய்களை குணப்படுத்தும் ஜடா தீர்த்த குளம்

நோய்களை குணப்படுத்தும் ஜடா தீர்த்த குளம்

- நமது நிருபர் -வீட்டில் பிரச்னை, அமைதியின்மை, நிம்மதி இல்லாமை போன்ற பிரச்னைகளால், மனம் நொந்துள்ளீர்களா? அதில் இருந்து விடுபட, ஷிவமொக்காவில் உள்ள திருத்தலத்துக்கு வாருங்கள். அங்கிருந்து திரும்பி வரும்போது, உங்களின் மன அழுத்தம் மாயமானதை உணர்வீர்கள்.ஷிவமொகா, ஹொசநகரில் குளிகுளி சங்கரன் கோவில் உள்ளது. கோவிலின் தீர்த்த குளம் பல அதிசயங்களை நிகழ்த்தும் குளமாகும். சிவபெருமான், இங்கு கங்கையை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சிறிய குளத்தில் இருந்து 40 ஏக்கர் நிலத்துக்கு தண்ணீர் கிடைக்கிறது.

மகத்துவம்

கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளத்தில் நீராடி பக்தியுடன் பூஜித்தால், வாழ்க்கையில் அனைத்து பிரச்னைகளும், கஷ்டங்களும் விலகும் என்பது ஐதீகம். எனவே, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சங்கரனும், கங்கையும் ஒரே இடத்தில் இருப்பதால், இந்த திருத்தலத்துக்கு மகத்துவம் அதிகம்.கோவிலின் தீர்த்த குளமான மந்திர குளம், 'ஜடா தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. அது மட்டுமின்றி கவுரி குளம், சங்கர குளம், குளிகுளி குளம் என பல பெயர்களிலும் அழைக்கின்றனர். காலை, மாலையில் குளத்தின் பாசி தங்கத்தை போன்று மின்னுவது குறிப்பிடத்தக்கது. இது சிவனும், பார்வதியும் ஓய்வெடுக்க வந்த இடம் என்பது ஐதீகம். இவர்கள் ஓய்வில் இருந்தபோது, சிவனுக்கு தாகம் எடுத்தது. அவர் தன் ஜடாமுடி வழியாக கங்கையாக பாயும்படி, பார்வதியிடம் கூறினாராம். அதன்படி பார்வதி, கங்கையாக சிவன் ஜடாமுடி வழியாக பாய்ந்து, அவரது தாகத்தை தணித்தார். தன் தாகம் தணிந்த பின், கங்கையை இங்குள்ள சகல ஜீவராசிகளுக்கும் நீர் கிடைக்க, இங்கேயே நிலைத்திருக்கும்படி கூறினாராம்.

சிவனின் ஜடை

அப்போது கங்கை, 'நீங்கள் இங்கு நிலை நின்றால், நானும் இங்கிருப்பேன்' என, கூறினார். சிவனும் சம்மதித்து இந்த இடத்தில், கங்கையுடன் நிலைத்து நின்றார். எனவே, இதை ஜடா தீர்த்தம் என அழைக்கின்றனர். எங்கிருந்தோ குளத்துக்கு தண்ணீர் வரவில்லை. குளத்திலேயே ஊற்றெடுக்கிறது. சிலர், காசியில் இருந்து வருவதாக கூறுகின்றனர். குளத்தில் தென்படும் பாசி, சிவனின் ஜடை எனவும், கூறப்படுகிறது.ஜடா தீர்த்த குளத்தின் நீர், பத்து மடங்கு சுத்தமானது. இந்நீர், பல்வேறு நோய்களை குணமாக்கும், நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டதாகும். இதை அருந்தினால் நோய்கள் குணமாவது மட்டுமல்ல, புண்ணியமும் கிடைக்கும்.பொதுவாக குளத்தில் எந்த இலைகளை போட்டாலும் மூழ்குவதில்லை. வில்வ இலையை போட்டால் மூழ்கும். சிவனை பிரார்த்தனை செய்து, வில்வ இலையை விட வேண்டும். 20 நிமிடத்துக்கு பின், வில்வ இலை மேலே வந்தால், பிரார்த்தனை நிறைவேறும்; இலை மேலே வரவில்லை என்றால், நிறைவேறாது என்பது அர்த்தம். மேலே வரும் வில்வ இலையை எடுத்து, குளத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது வைத்து, பூஜை செய்யப்படுகிறது.குளத்தில் விடும் வில்வ இலை, குளத்தில் உள்ள சிவலிங்கத்தை தொட்டு வந்தால், அவர்களின் வாழ்க்கை சுபிக்ஷமாகும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களால் அவதிப்படுவோர், ஒரு முறை இந்த கோவிலுக்கு வந்து, சங்கரனை தரிசியுங்கள். குளத்தில் நீராடுங்கள். கஷ்டங்கள் பஞ்சாக பறந்துவிடும்.

கோவில் நடை திறப்பு நேரம்: காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தொலைபேசி : 080 - 2235 2828  பெங்களூரில் இருந்து, 280 கி.மீ., தொலைவில் ஷிவமொக்கா உள்ளது. பஸ், ரயிலில் வரலாம். ஷிவமொக்கா - பெங்களூரு இடையே, விமான போக்குவரத்தும் உள்ளது. விமானத்தில் வந்தால் மங்களூரு விமான நிலையத்தில் இறங்கலாம். இங்கிருந்து வாடகை வாகனங்களில், 166 கி.மீ., தொலைவில் உள்ள குளிகுளி சங்கரன் கோவிலை அடையலாம். ரயில் அல்லது பஸ்சில் வந்தால், ஷிவமொக்கா ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். இங்கிருந்து 35 கி.மீ., தொலைவில் கோவில் உள்ளது. வாடகை வாகனங்கள் வசதி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ