அடர்ந்த வனப்பகுதிக்குள் ஜோம்லு தீர்த்த நீர்வீழ்ச்சி
உடுப்பி மாவட்டம், ஹெப்ரியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது சோமேஸ்வரா வனவிலங்கு சரணாலயம். அடர்ந்த வனப்பகுதியில், 20 மீட்டர் உயரத்தில் இருந்து விழுகிறது ஜோம்லு தீர்த்த நீர்வீழ்ச்சி. இது சீதா நதியால் உருவான நீர் வீழ்ச்சியாகும்.ஜோம்லு நீர்வீழ்ச்சியின் சத்தம், பறவைகளின் கீச்சொலி, அமைதியான சூழல் ஆகியவை நீர்வீழ்ச்சியின் அழகை மேலும் கூட்டுகின்றன.வார இறுதியை, குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட ஏற்ற இடமாகும். புத்துணர்ச்சியூட்டும் நீரில் குளிப்பதற்கும் ஏற்றது.அடர்ந்த வனப்பகுதியில் நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. நீரில் குளித்தவுடன் பசி எடுப்பது வாடிக்கை. எனவே, கையோடு உணவு, தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும்.நீரில் குளிக்க மட்டுமல்ல, மீன் பிடிக்க துாண்டிலும் எடுத்துச் செல்லலாம். உள்ளூர் மக்கள் வாரந்தோறும் இங்கு வந்து வார இறுதி நாட்களை செலவழிக்கின்றனர்.20 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் ஜோம்லு தீர்த்த நீர்வீழ்ச்சி.
செல்ல ஏற்ற நேரம்
இங்குள்ள பாறைகள் வழுக்கும். எனவே, மழைக்காலத்தில் சுற்றுலா பயணியர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பல நேரம் அசம்பாவிதங்கள் நடந்துள்ளதால், மழைக்காலத்தில் நீரில் இறங்காமல் இருப்பது நல்லது.நீர்வீழ்ச்சியில் குளிக்க விரும்புபவர்கள், மழைக்காலம் முடிந்த பின், இங்கு செல்வது நல்லது. இரவு நெருங்குவதற்கு முன் புறப்பட வேண்டும்.தினமும் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை சரணாலயத்துக்குச் சென்று வரலாம்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்பவர்கள், மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 72 கி.மீ., காரில் பயணித்து, ஆகும்பே செல்லலாம். ரயிலில் செல்பவர்கள் குந்தாபூரா அல்லது உடுப்பி ரயில் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து பஸ், காரில் செல்லலாம்.பஸ்சில் செல்பவர்கள் ஹெப்ரிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து ஆட்டோ, பஸ்சில் செல்லலாம். அதுபோன்று, ஹெப்ரியில் இருந்து உடுப்பிக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.