மும்பை, மஹாராஷ்டிராவில், 19 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த சகோதரர்கள் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே மாநில பா.ஜ., அரசின் ஹிந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூலை 5ல் மும்பையில் மாபெரும் போராட்டத்தை இணைந்து நடத்த முடிவு செய்துள்ளனர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மராத்தி மற்றும் ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகளில், 1 - 5ம் வகுப்பு வரை ஹிந்தி பொதுவான மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும், மூன்றாவதாக வேறு ஒரு மொழியை கற்க விரும்பினால், அதற்கு 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும் என்றும், திருத்தப்பட்ட அரசாணையை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது.'இது, ஹிந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி' என, காங்., உட்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அழைப்பு
மஹாராஷ்டிராவில், 19 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த உத்தவ் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர், மும்மொழி கொள்கை மற்றும் ஹிந்தி திணிப்பு விவகாரத்தில், 'ஈகோ'வை விட்டுவிட்டு இணைந்து செயல்பட உள்ளதாக, சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.பால் தாக்கரேயின் இளைய சகோதரரின் மகனான ராஜ் தாக்கரே, சிவசேனாவில் இருந்து 2006ல் வெளியேறினார். கட்சியில் உத்தவ் தாக்கரேவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய அவர், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை துவக்கினார்.சமீபத்தில், மும்மொழி கொள்கை மற்றும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக, மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் ஜூலை 7ல் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவித்தார். அதே சமயம், மும்பையின் கிர்காம் சவுபட்டியில் இருந்து அரசியல் சாராத பேரணியை, ஜூலை 6ல் நடத்த உள்ளதாக தெரிவித்த ராஜ் தாக்கரே, இதில், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.இந்நிலையில், மும்பையில் நேற்று, உத்தவ் சிவசேனா கட்சி மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜூலை 6ல் நடக்கவுள்ள பேரணியில் பங்கேற்கும்படி, உத்தவ் தாக்கரேவுக்கு ராஜ் தாக்கரே முறைப்படி அழைப்பு விடுத்தார். இதில் பங்கேற்க உத்தவ் விருப்பம் தெரிவித்தார். எனினும், அன்றைய தினம் 'ஆஷாதி ஏகாதசி' வருவதால் மக்களுக்கு சிரமமாக இருக்கும் என, அவர் கருதினார். ஆலோசனை
இதையடுத்து, இருவரும் இணைந்து ஜூலை 5ல் போராட்டம் நடத்தலாம் என, ராஜ் தாக்கரேவுக்கு உத்தவ் தாக்கரே ஆலோசனை கூறினார். இதை, ராஜ் தாக்கரேவும் ஏற்றுக்கொண்டார். அதன் படி, உத்தவ் சிவசேனா - மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சிகளின் கூட்டுப் போராட்டம் மும்பையில் ஜூலை 5ல் நடக்கும்.நேரம் மட்டுமே இறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகள் விவாதித்து முடிவு செய்வர். மாபெரும் கூட்டுப் போராட்டத்தில், ஒரே மேடையில், உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே தோன்றுவர்.மஹாராஷ்டிரா உருவாவதற்காக கடந்த 1960ல் நடந்த, 'சம்யுக்த மஹாராஷ்டிரா' இயக்கத்தின் போராட்டம் போல இந்த கூட்டுப் போராட்டம் இருக்க வேண்டும் என, இரு தலைவர்களும் நினைக்கின்றனர். இதில் பங்கேற்கும்படி மற்ற அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மஹாராஷ்டிராவில் பல ஆண்டு காலமாக எதிரெதிர் அரசியலில் ஈடுபட்டு வந்த உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே ஆகியோர், மும்மொழி கொள்கை மற்றும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக, ஜூலை 5ல் ஒரே மேடையில் தோன்ற உள்ளது, அவர்களின் கட்சி தொண்டர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக, மாநிலத்தில் நடக்கும் தேர்தல்களில் இருவரும் இணைந்து போட்டியிடவும் வாய்ப்புள்ளது.