உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பண மூட்டை வழக்கில் நீதிபதி மனு; லோக்சபா, ராஜ்யசபாவுக்கு நோட்டீஸ்

 பண மூட்டை வழக்கில் நீதிபதி மனு; லோக்சபா, ராஜ்யசபாவுக்கு நோட்டீஸ்

தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவை ரத்து செய்யக் கோரி, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி, லோக்சபா, ராஜ்யசபாவுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

விசாரணை குழு

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, டில்லியில் உள்ள அரசு பங்களாவில் வசித்த நிலையில், கடந்த மார்ச்சில், அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின் போது, வீட்டில் உள்ள ஓர் அறையில் எரிந்த நிலையில், 500 ரூபாய் கட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார். அவருக்கு வழக்குகள் எதுவும் ஒதுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் விசாரணை குழு விசாரித்ததில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. தொடர்ந்து, அவரை பதவி விலகும்படி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேட்டுக் கொண்டார். அவர் முரண்டு பிடித்தார். கடந்த ஜூலை - ஆக., வரை நடந்த பார்லி., மழைக்காலக் கூட்டத்தொடரில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், எதிர்க்கட்சிகளின், 'இண்டி' மற்றும் ஆளும் தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் அளித்தனர். இதை ஏற்ற சபாநாயகர் ஓம் பிர்லா, நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் அடங்கிய விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

ஒத்தி வைப்பு

இந்த விசாரணைக் குழுவை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ராஜ்யசபா தலைவருடன் கலந்து ஆலோசிக்காமல், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார். இது அரசியலமைப்பு பிரிவு 124, 217 மற்றும் 218 ஆகியவற்றுக்கு எதிரானது. எனவே, விசாரணை குழுவை ரத்து செய்ய வேண்டும்' என, வாதிட்டார். இதை பதிவு செய்த நீதிபதிகள், லோக்சபா சபாநாயகர் அலுவலகம், லோக்சபா மற்றும் ராஜ்யசபா செயலர்கள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜன., 7க்கு ஒத்தி வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சுந்தர்
டிச 17, 2025 18:26

பணம் கண்டுபிடிக்கப்பட்டது நீதிபதி வீட்டில். முதலில் அவர்தான் பதில் அளிக்க வேண்டும். நீதி எது?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 17, 2025 10:16

கவனிக்கவும்... மாபெரும் ஜனநாயக நாட்டில் அரசியல்வாதியையோ, நீதிபதியையோ சட்டம் அவ்வளவு எளிதில் தொட்டுவிட முடிவதில்லை....


Nagarajan D
டிச 17, 2025 09:45

ஏண் நீதிபதி அது எப்படி ஒரு நீதிபதி ஊழல் செய்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட பின்னும் விசாரிக்க அமைத்த குழு விசாரிக்க கூடாது என்று குற்றவாளி கேக்குறார் என்று நீங்க ஒரு நோட்டீஸ் குடுக்குறிங்க எவ்வளவு கேவலமா இருக்கு... இப்படி பட்டவங்க நீதிபதியா இருக்குற வரைக்கும் தீர்ப்புகள் என்றுமே விற்பனைக்கு தான்...


Ravi Kulasekaran
டிச 17, 2025 10:23

நீதிபதிகள் கடவுள் அல்ல சாதாரண மனிதர்களுக்கு என்ன நடைமுறையோ அதனை தான் நீதிபதிகளுக்கு பின்பற்ற வேண்டும் அவர்களை தனியாக யாருக்கும் தெரியாமல் ஏன் விசாரணை செய்ய வேண்டும் நீதித்துறை மக்களிடம் எதனை மறைக்க முயல்கிறது


ஜெகதீசன்
டிச 17, 2025 08:34

இவரது மனுவை ஏன் ஏற்கனும்? ஏன் விசாரனைக்கு முட்டு கட்டை போடனும்? அப்பட்டமாக தெரியும் இதிலுமா இழுத்தடிப்பு?


Gokul Krishnan
டிச 17, 2025 08:15

ஒரு கடை நிலை ஊழியர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினால் அவரை கைதாவது செய்து இடைநீக்கம் செய்ய முடிகிறது ஆனால் கோடி ரூபாய் எரிந்த நிலையில் ஆதாரத்துடன் எடுத்த பின்னும் இந்த நீதிபதி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றால் இதன் பின்னணியில் மிக பெரிய அரசியல் பலம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக துணை குடியரசு தலைவர் பதவி விலகல், இப்போது நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை வழக்கில் சோனியா ராகுல் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி இப்படி எல்லாம் நடப்பது சாதாரண மக்கள் நீதி மற்றும் அரசியல் சாசனம் மீதான நம்பிக்கை இல்லை


Iyer
டிச 17, 2025 07:59

இந்த ஒருவன் மட்டும் அடித்த கொள்ளையா அத்தனை கோடிகளும்?


Anantharaman
டிச 17, 2025 07:59

ஜனவரி 7 வரை ஏன் 1 2 நாளில் பதிலளிக்க?முடியாது? உச்ச நீதி மன்றம் இப்படித்தான் வழக்குகளை கோடிக்கணக்கில் தாமதிப்பது வழக்கமாக வைத்துள்ளது.


Mahendran Puru
டிச 17, 2025 06:33

பண மூட்டை விவகாரத்தில் ஒன்றும் செய்யவில்லை மத்திய அரசு. பங்கு வந்து சேர்ந்து விட்டால் விசாரணை நீர்த்துப் போகும் நிலை.


சந்திரன்
டிச 17, 2025 08:33

இதற்கும் மத்திய அரசிற்கும் என்ன சம்பந்தம் அறிவு கழன்றவன் போல கருத்து போடக்கூடாது


KAMALANATHAN MANICKAM
டிச 17, 2025 10:10

மத்திய அரசு குடியரசு தலைவரிடம் அவரை பதவி நீக்கம் செய்ய சொல்ல முடியும் அவருக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல் பழி வாங்க முடியும் ஆனால் எதையும் செய்யாமல் இழுத்தடிப்பது தவறு


தாமரை மலர்கிறது
டிச 17, 2025 02:45

விசாரணையை ரத்து செய்வது நல்லது.