தமிழகத்திலிருந்து, ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும், தி.மு.க.,வைச் சேர்ந்த 3 பேர், புதிய எம்.பி.,க்களாக நேற்று பதவி ஏற்றனர். அப்போது, எம்.பி.,க்கள், ராஜ்யசபா அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் என, பலரும் போட்டி போட்டு நடிகர் கமலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,க்களான வைகோ, அன்புமணி, வில்சன், அப்துல்லா, சந்திரசேகரன், சண்முகம் ஆகியோரின் பதவிக்காலம் நேற்று முன் தினம் முடிவடைந்தது. முன்வரிசை
இந்த இடங்களுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தி.மு.க.,வில் இருந்து ஏற்கனவே எம்.பி.,யாக இருந்த வில்சன் மற்றும் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும், அ.தி.மு.க.,வில் இருந்து இன்பதுரை, தனபால் ஆகியோரும் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில், கமல் மற்றும் தி.மு.க.,வை சேர்ந்த மூன்று பேர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். முதல் நபராக கமல்ஹாசன் அழைக்கப்பட்டார். கருப்பு பேன்ட், வெள்ளை சட்டையில் வந்த கமல், தமிழில் உறுதிமொழி ஏற்றார். பதவி ஏற்ற பின், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா உள்ளிட்ட மூத்த எம்.பி.,க்கள் அமரும் முன்வரிசையில் வந்து சிவா அருகில், அமர்ந்து கொண்டார். இவரைத் தொடர்ந்து சல்மா, சிவலிங்கம், வில்சன் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு முடிந்ததுமே, எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் அமளி துவங்கியதால், சபை 12:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, கமல் இருக்கும் இடத்தை நோக்கி, எம்.பி.,க்கள் மொய்க்கத் துவங்கினர். அவரிடம் வந்து, கைகொடுத்து வாழ்த்து தெரிவிப்பதை விட, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதிலேயே அனைவரும் ஆர்வமாக இருந்தனர். இதனால், மீண்டும் சபை துவங்கும் வரையில், கமல் அங்கேயே இருக்க நேரிட்டது. ஒவ்வொருவருடன் போட்டோவுக்கு போஸ் தந்து, கிட்டத்தட்ட களைத்துப்போகும் நிலைக்கு வந்துவிட்டார். ஒத்தி வைப்பு
எம்.பி.,க்கள் ரேணுகா சவுத்ரி, பிரியங்கா சதுர்வேதி, ஜெபி மாதர், கனிமொழி சோமு, சல்மா என பலரும் வரிந்து கட்டிக் கொண்டு, வரிசையாக போட்டோ எடுத்துக் கொண்டனர். இதைப் பார்த்த ஆர்வத்தில், ராஜ்யசபாவில் பணிபுரியும் பெண் மொழிபெயர்ப்பாளர் உட்பட இரு தமிழ் பெண்கள், ஓடோடி வந்து, கமலுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். தவிர, தி.மு.க., - எம்.பி.,க்கள், அனைவரும் தனித்தனியாகவும், குரூப்பாகவும், கமலுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். சபை கூடி, மீண்டும் ஒத்திவைக்கப்பட்டவுடன், மறுபடியும் கமலை, பல எம்.பி.,க்கள் மொய்த்துக் கொண்டனர். இவ்வாறு ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்ட இடைப்பட்ட வேளையில், கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக, சபைக்குள்ளேயே கமல் நின்று கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டே இருந்தார். எம்.பி.,க்கள் உணவகத்திற்குள் உணவருந்த சென்ற கமல் மற்றும் அவருடன் வந்தவர்களை தடுத்த பார்லிமென்ட் ஊழியர்கள், விருந்தினர் உணவகத்திற்கு செல்லும்படி வழிகாட்டினர். அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் இன்பதுரையும், தனபாலும், நேற்று பார்லிமென்ட் வந்திருந்தாலும், பதவியேற்கவில்லை. காரணம், அமாவாசை முடிந்த அடுத்தநாள் பாட்டியம்மை, நல்லநாள் இல்லையாம். இதனால், இவர்கள் இருவரும் வரும் திங்களன்று பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. -நமது டில்லி நிருபர்-