உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெனாலி சாஸ்திரிய கல்வி அறிஞர்களுக்கு காஞ்சி பீடாதிபதிகள் அருளாசி

தெனாலி சாஸ்திரிய கல்வி அறிஞர்களுக்கு காஞ்சி பீடாதிபதிகள் அருளாசி

திருப்பதி:நம் பாரம்பரிய சாஸ்திரிய கல்வியில் தேர்ச்சி பெற்ற, 12 சாஸ்திரிய அறிஞர்களுக்கு காஞ்சி பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சங்கராச்சார்ய சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், தங்களது பூரண ஆசிகளை வழங்கினர். ஆந்திர மாநிலம் தெனாலியில் உள்ளது ஸ்ரீ காஞ்சி வேத வேதாந்த சாஸ்திர சபை. இங்கு ஆண்டுதோறும் பாரம்பரிய குருகுல கல்வி முறையில், சாஸ்திர பரீட்சை நடத்தப்படுகிறது. பாரம்பரிய குருகுல கல்வி முறையில், தெனாலி சாஸ்திர பரீட்சை நடத்தப்படுகிறது. ஆறு ஆண்டுகள் இதற்காக குருகுலத்தில் தங்கி பயின்று, பண்டைய சாஸ்திரங்களில் உள்ள வியாகரணம், வேதாந்தம், தர்க்கம் போன்ற பல பகுதிகளில் ஆழமான புலமை பெற வேண்டும். சாஸ்திர அறிஞர்களை உருவாக்கும் நோக்கில் தெனாலியில் உள்ள ஸ்ரீ காஞ்சி வேத வேதாந்த சாஸ்திர சபையில், 16 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசியும், சான்றிதழும் வழங்கும் விழா ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது. இதில், காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சங்கராச்சார்ய சுவாமிகள், பங்கேற்று, நாடு முழுதும் பல்வேறு குருக்களிடம், 'தெனாலி' சாஸ்திர கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற, 12 சாஸ்திரிய அறிஞர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். தெனாலி சாஸ்திர கல்வியை முடித்ததற்கான சான்றிதழ் மற்றும் மதிப்பூதியமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. சமூக நலன் மற்றும் தர்ம பிரசாரத்திற்கு சாஸ்திரிய அறிவு மிகவும் அவசியமானது என, காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சங்கராச்சார்ய சுவாமிகள் வலியுறுத்தினார். பரோடா, காஞ்சி, மைசூரு மற்றும் தஞ்சையில் உள்ள நுாலகங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் மனுஸ்மிருதிகளை பிரதி எடுத்து, அவற்றை நுால்களாக வெளியாவதற்கான பணிகளில் சாஸ்திரிய அறிஞர்கள் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் காஞ்சி பல்கலை வேந்தர் ஸ்ரீ குடும்ப சாஸ்திரி, துணை வேந்தர் ஸ்ரீ சீனிவாசலு, திருப்பதியில் உள்ள தேசிய சம்ஸ்கிருத பல்கலை துணை வேந்தர் ஸ்ரீ ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீவெங்கடேஸ்வரா வேத பல்கலை துணை வேந்தர் ஸ்ரீ ராணி சதாசிவமூர்த்தி மற்றும் திருப்பதியில் உள்ள பல அறிஞர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை