உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இலவச உணவு, மருத்துவ பரிசோதனை அட்சய பாத்திரமாக விளங்கும் கன்னட சேவா சமிதி

இலவச உணவு, மருத்துவ பரிசோதனை அட்சய பாத்திரமாக விளங்கும் கன்னட சேவா சமிதி

தினமும் நுாற்றுக்கணக்கான மக்களின் பசியை போக்குவது மட்டுமின்றி, வாரத்தில் மூன்று நாட்கள் இலவச மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படுவது சாதாரண காரியமல்ல.பெங்களூரு ஜெயநகர் நான்காவது பிளாக்கில், ஜெயின் கோவில் எதிரில் 'வீர வனிதே ஒலகே ஓபவ்வா' கன்னட சேவா சமிதி உள்ளது.

இலவச உணவு

இச்சமிதி முன் கர்நாடகா மற்றும் கன்னடத்துக்காக உழைத்த பல மனிதர்களின் உருவப் படங்களை காணலாம். இந்த சமிதி சார்பில் தினமும் நுாற்றுக்கணக்கானோருக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறது.ஏழைகள், தொழிலாளர்கள், நோயாளிகள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் உட்பட பலருக்கு இது 'அக் ஷய பாத்திரம்' போன்று பயனளிக்கிறது. தினமும் சாதம், சாம்பார், சூடான பருப்பு, மோர் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவு வழங்கப்படும். மதியம் 1:30 மணி முதல் உணவு தீரும் வரை வழங்கப்படுகிறது.சமிதி தலைவர் ரமேஷ் ராஜு கூறியதாவது:எங்கள் சமிதி சார்பில் ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வந்தோம். அதன் பின், கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பலர் உணவின்றி தவித்தனர்.இதைப் போக்க, சமிதி சார்பில் தினமும் 100 பேருக்கு உணவு வழங்கி வருகிறோம்.

ஆத்மயா சேத்தனா

கொரோனா முடிந்த பின், நிறுத்திய போதும், தினமும் பலர் வந்து கேட்க துவங்கினர்.இதையறிந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த குமாரின் 'ஆத்மயா சேத்தனா' அமைப்பு, எங்களை தொடர்பு கொண்டு, இச்சேவையை நிறுத்த வேண்டாம்; தாங்கள் உதவுவதாக தெரிவித்தனர். தினமும் இவர்கள் அமைப்பு வாயிலாக வாகனத்தில் உணவு கொண்டு வருகின்றனர். பின், பசியால் வாடும் ஏழைகளுக்கு வழங்குகிறோம்.எங்கள் சேவையை அறிந்த பலரும், நன்கொடை வழங்குகின்றனர். அவர்களின் பெயரில், அன்றைய தினத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.உணவு மட்டுமின்றி, வாரத்தில் மூன்று நாட்கள் இலவச மருத்துவ சேவையும் நடத்தி வருகிறோம்.திங்கிட்கிழமை பல் சம்பந்தமான பிரச்னை; புதன்கிழமை பொது, ரத்த அழுத்தம்; ஞாயிற்றுக்கிழமை பிசியோதெரபி சிகிச்சை செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இச்சமிதியின் சேவை குறித்து பாராட்டவோ, உதவி செய்ய விரும்பினாலோ, 99021 44152 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.� தினமும் நுாற்றுக்கணக்கானோருக்கு இலவசமாக உணவு வழங்கும் சமிதியினர். � மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை