உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குறிப்பிட்ட நிலையத்தை தாண்டி இறந்தாலும் இழப்பீடு வழங்க கர்நாடக ஐகோர்ட் உத்தரவு

குறிப்பிட்ட நிலையத்தை தாண்டி இறந்தாலும் இழப்பீடு வழங்க கர்நாடக ஐகோர்ட் உத்தரவு

பெங்களூரு: 'டிக்கெட் வாங்கிய ரயில் நிலையத்தில் இறங்காமல் பயணிக்கும் போது, ஏதேனும் காரணத்தால் பயணி இறந்தால், இழப்பீடு வழங்க வேண்டும்' என தென்மேற்கு ரயில்வேக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.பெங்களூரு ஒயிட்பீல்டில் இருந்து குப்பம் செல்வதற்காக, மைசூரு - திருப்பதி ரயிலில், 2009 பிப்., 14ம் தேதி ஒரு ஆண் பயணித்தார். குப்பம் நிலையத்தில், அதிகமான கூட்டம் காரணமாக, அவரால், வெளியே வர முடியவில்லை. அதற்குள் ரயில், புறப்பட்டு விட்டது.ரயில் பெட்டியின் நுழைவு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென கால் தவறி கீழே விழுந்ததில், சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்தார்.இந்த வழக்கை விசாரித்த ரயில்வே தீர்ப்பாயம், இறந்தவரின் குடும்பத்துக்கு, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.இதை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், தென்மேற்கு ரயில்வே நிர்வாக இயக்குனர் மனு தாக்கல் செய்திருந்தார்.மனு மீதான விசாரணையில், ரயில்வே துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ''ரயிலில் இருந்து கீழே விழுந்த பயணி, ஒயிட்பீல்டில் இருந்து குப்பம் வரை மட்டுமே டிக்கெட் வாங்கியிருந்தார். ஆனால், அவர், குப்பம் ரயில் நிலையத்தில் இருந்து, 5 கி.மீ., தொலைவில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.''இறந்தவருக்கும், ரயில்வே துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இழப்பீடு வழங்க முடியாது. ரயில்வே தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.இம்மனுவை விசாரித்த நீதிபதி சந்தேஷ் கூறியதாவது:ஒருவழி பயண டிக்கெட் பெற்று கொண்டு, வேறு ரயிலில் பயணிக்கும் போது, அந்நபர் இறந்தாலும், இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம், ஒரு வழக்கில் கூறி உள்ளது.அதுபோன்று, இவ்வழக்கில் இறந்த பயணி, இறங்க வேண்டிய ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில், கால் தவறி இறந்ததாக, சாட்சியங்கள் கூறி உள்ளன. எனவே, இறந்தவருக்கு இழப்பீடு வழங்க கோரிய ரயில்வே தீர்ப்பாயத்தின் உத்தரவில் தவறில்லை. இதை எதிர்த்து தென்மேற்கு ரயில்வே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ