தென்னிந்திய பாடல்களுடன் கதக் நடனம்! பிரபல நடன கலைஞர் ஹரி தகவல்
பாலக்காடு; தென்னிந்திய பாடல்களுடன் இணைத்து, வட இந்திய கலை வடிவமான கதக் நடனத்தை அறிமுகப்படுத்துகிறேன், என, கதக் நடன கலைஞர் ஹரி தெரிவித்தார்.கேரளா மாநிலம், பாலக்காடு ராப்பாடி கலையரங்கில், ஸ்வரலயா கலை அமைப்பு சார்பில், வரும் 31ம் தேதி வரை நடன சங்கீத உற்சவம் நடக்கிறது. நேற்று நடந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, கதக் நடனக் கலைஞர் ஹரி நிருபர்களிடம் கூறியதாவது:தென்னிந்திய பாடல்களுடன் இணைக்கப்பட்டு, வட இந்திய கலை வடிவமான கதக் என்ற நடனத்தை அறிமுகப்படுத்துகிறேன். இது, கதக்கின் நாட்டிய சாஸ்திரம் முறை படி நிகழ்த்தப்பட்டாலும், அதன் விளக்கக்காட்சி முறையை தென்னிந்திய இசையுடன் இணைக்கப்பட்டுள்ளது.இதனால், ரசிகர்களிடம் கூடுதல் நெருக்கம் ஏற்படும். கதக் நடன வடிவம் பொதுவாக பிரபலமில்லை. இது தென்னிந்திய மாநிலங்களில் நிகழ்த்தப்படும்போது, இந்த இசைக் கலைகளை சேர்க்கும்போது பிரபலமாகிறது.சுவாதி திருநாளின் கீர்த்தனத்தோடு தொடங்கும் நடனம் சிவாஞ்சலி, கணேச வந்தனம், பூர்வரங்கு, ஜுகல்பந்தியில் முடிவடைகிறது. இதில், இணைக்கப்பட்டுள்ள இசைகள் அல்லது தென்னிந்திய நடன வடிவங்கள் வாயிலாக, கதக் என்ன என்பது பார்வையாளர்களுக்கு நன்கு தெரியும்.எனவே, கதக் ஒரு பழக்கமில்லாத நடன வடிவம் என்ற உணர்வு ஏற்படாது. அதனால் தான், அனைத்து மேடைகளிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.