டில்லி மக்களுக்கு கெஜ்ரிவால் துரோகம் பா.ஜ.,வுக்கு தாவிய மாஜி குற்றச்சாட்டு
புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., சுக்பீர் சிங் தலால் மற்றும் டில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு உறுப்பினர் சர்தார் பல்பீர் சிங் ஆகியோர், பா.ஜ.,வில் நேற்று சேர்ந்தனர்.முண்ட்கா தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வாக 2015 - 2020வரை பதவி வகித்தவர் சுக்பீர் சிங் தலால். அக்கட்சியில் இருந்து நேற்று விலகிய தலால், டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.,வில் சேர்ந்தார்.அப்போது, சுக்பீர் சிங் தலால் கூறியதாவது: முண்ட்கா எம்.எல்.ஏ.ம்வாக இருந்தபோது, விளையாட்டுப் பல்கலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரு செங்கலைக் கூட வைக்கவில்லை. ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து ஆம் ஆத்மி பாதை மாறி விட்டது. டில்லி மக்களின் நம்பிக்கைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் துரோகம் செய்து விட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.டில்லி பா.ஜ., ஊடகப் பிரிவு தலைவர் பிரவின் ஷங்கர் கபூர், முன்னாள் எம்.எல்.ஏ., நிதின் தியாகி, டில்லி மாநகராட்சி கவுன்சிலர் பெஹன் பிரீத்தி மற்றும் ஆஷிஷ் சூட் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.டில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு உறுப்பினரான, சர்தார் பல்பீர் சிங்கும் பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.அப்போது, சச்தேவா பேசியதாவது: விளையாட்டுப் பல்கலை அமைப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி மட்டுமே கொடுத்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. அவர் அறிவிக்கும் பெரும்பான்மையான திட்டங்கள் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன. அதேநேரத்தில், மத்திய பா.ஜ., அரசு, எந்த ஒரு திட்டத்தையுமே தன் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றுவதை உறுதி செய்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார். மத்திய அமைச்சர் மல்ஹோத்ரா, “ஆம் ஆத்மி அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. அக்கட்சியின் ஊழல் எதிர்ப்பு கொள்கையை நம்பிய டில்லி மக்கள் இப்போது ஆம் ஆத்மியின் உண்மை முகத்தை அறிந்து விட்டனர்,”என்றார்.டில்லி சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரியில் நடக்கிறது.