உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொகுசு பங்களா விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு புதிய சிக்கல் !  

சொகுசு பங்களா விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு புதிய சிக்கல் !  

புதுடில்லி: டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக சொகுசு பங்களாக கட்டப்பட்ட விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு, சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், இந்த விவகாரம் கெஜ்ரிவாலுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.டில்லி சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றது. தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி தோல்வியடைந்தது.கடந்த, 2015 முதல், மதுபான ஊழல் மோசடி வழக்கில் கடந்தாண்டு அக்டோபரில் முதல்வர் பதவியில் இருந்து விலகும் வரை, கொடிமரச் சாலையில் உள்ள அரசு பங்களாவில் கெஜ்ரிவால் வசித்து வந்தார்.

விதிமீறல்

தன் ஆட்சியின்போது, இந்த பங்களாவை பல கோடி ரூபாய் செலவில் அவர் புதுப்பித்தார். தனக்காக சொகுசு வசதிகளுடன் கூடிய கண்ணாடி மாளிகையைக் கட்டியதாக கெஜ்ரிவாலுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன.கடந்தாண்டு அக்டோபரில் பா.ஜ.,வைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா, கெஜ்ரிவாலுக்கு எதிராக மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பில் புகார் கூறியிருந்தார். அதில், அரசு விதிமுறைகளை மீறி, நான்கு நிலங்களை ஒன்றாக சேர்த்து, அதில் பிரமாண்ட பங்களா கட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.புகாரில் விஜேந்தர் குப்தா கூறியிருந்ததாவது: முதல்வருக்காக, கொடிமரச் சாலை எண், 6ல் அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துடன், அதற்கடுத்துள்ள ராஜ்புர் சாலை எண் 45 மற்றும் 47ல் உள்ள பிளாட்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, கொடி மரச் சாலையில் எண் 8ஏ மற்றும் 8பி-யில் உள்ள இரண்டு அரசு பங்களாக்களும் இணைக்கப்பட்டுஉள்ளன. இந்த வகையில், மொத்தம், 8 ஏக்கர் நிலப்பரப்பு சட்டவிரோதமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.இவற்றை ரத்து செய்ய வேண்டும். இதைத் தவிர, பல கோடி ரூபாய் செலவிட்டு நடந்த கட்டுமானங்களிலும், விதிமீறல்கள், மோசடிகள் நடந்துள்ளன.இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த புகார் குறித்து ஆய்வு செய்யும்படி, மத்திய அரசின் பொதுப்பணித் துறைக்கு, சி.வி.சி., உத்தரவிட்டிருந்தது. இதன்படி, மத்திய பொதுப் பணித் துறை, தன் ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

சி.ஏ.ஜி., அறிக்கை

கட்டுமானத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த அறிக்கையின் அடிப்படையில் விரிவான ஆய்வ செய்ய, மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் நேற்று உத்தரவிட்டுள்ளது.முன்னதாக, முதல்வர் பங்களா கட்டுமானம் குறித்து, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் விசாரணைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் 2023ல் உத்தரவிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து சி.ஏ.ஜி.,யின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதை சட்டசபையில் ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்யவில்லை.முதல்வருக்கான பங்களா கட்டுமானத்தில் பெருமளவில் முறைகேடுகளும், விதிமீறல்களும் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. பங்களா புனரமைப்புக்கு, 7.91 கோடி ரூபாய் மதிப்பிட்ட நிலையில், 33.66 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதற்கு முறையான ஒப்புதல் பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து சி.பி.ஐ.,யும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், சி.வி.சி.,யும் முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே டில்லி மதுபான கொள்கை மோசடியில் கெஜ்ரிவால் சிக்கி, சிறை சென்றார்.தற்போது, பங்களா கட்டுமான முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என, தெரிகிறது.அம்பலமாகும் ஊழல்!கெஜ்ரிவால் செய்த அனைத்து மோசடிகளும் வெளிவரும். யாரும் தப்ப முடியாது. ஆம் ஆத்மி அரசின் ஊழலை அம்பலப்படுத்துவதற்காகவே, பா.ஜ.,வுக்கு டில்லி மக்கள் ஓட்டளித்தனர். எனவே, புதிதாக அமையும் பா.ஜ., அரசு, கெஜ்ரிவால் கும்பலின் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வரும். - வீரேந்திர சச்தேவா, டில்லி பா.ஜ., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ