| ADDED : மார் 26, 2025 06:50 PM
திருவனந்தபுரம்: தான் கருப்பு நிறம் என்ற வகையில் விமர்சனம் செய்யப்பட்டதற்கு கேரள தலைமைச் செயலர் சாரதா முரளிதரன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். கருப்பு நிறத்தை ஏன் இழிவுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளார்.கேரள தலைமைச் செயலாளராக இருந்த வேணு கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதனையடுத்து அம்மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக , வேணுவின் மனைவி சாரதா முரளிதரன் நியமிக்கப்பட்டார். கணவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மனைவி புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்ட்டது பலரின் கவனத்தை பெற்றது.இந்நிலையில், பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: சமூக வலைதளத்தில் எனது கணவரின் நிறம் வெள்ளை. இவர் கருப்பு என கமென்ட் வந்ததாக கேள்விப்பட்டேன். எனது கருமையை நான் சொந்தமாக்கி கொள்ள வேண்டும். இந்த பதிவை நான் முதலில் காலையில் பதிவிட்டேன். அதற்கு கிடைத்த பதில்களால் குழம்பிப்போய் அந்த பதிவை நீக்கினேன். ஆனால், சில நலன் விரும்பிகள் இந்த விஷயம் விவாதிக்கப்பட வேண்டும் எனக் கூறியதால் மீண்டும் பதிவிடுகிறேன். கருப்பு நிறத்தை ஏன் இழிவுபடுத்த வேண்டும். இந்த பிரபஞ்சத்தில் வியாபித்திருப்பது கருப்பு என்பதுதான் உண்மை. கருப்பு நிறம், எதையும் ஏற்றுக்கொள்ளும் திறன்கொண்ட நிறமாகும். மனித குலம் அறிந்த மிக சக்திவாய்ந்த துடிப்பு. இந்த நிறமானது, அனைவருக்காக வேலை செய்யும். அலுவலகத்திற்கான ஆடை குறியீடாக உள்ளது. மழைக்கான உறுதிமொழியாக உள்ளது.நான் நான்கு வயதாக இருக்கும் போது எனது தாயாரிடம், ' என்னை மீண்டும் கருவறைக்குள் கொண்டுசென்று வெள்ளை நிற அழகியாக்கி மீண்டும் கொண்டுவர முடியுமா?' எனக் கேட்டிருக்கிறேன். போதுமான நிறம் இல்லை என்ற கதையை கடந்த 50 ஆண்டுகளாக கேட்டு வருகிறேன். எனது குழந்தைகள் தான், கருப்பு பாரம்பரியத்தில் பெருமைப்பட்டார்கள். கான் கவனிக்காத இடத்தில் அழகைக் கண்டுபிடித்தவர்கள். கருப்பு அற்புதம் என்று நினைத்தவர்கள். நான் பார்க்க உதவியவர்கள். கருப்பு அழகாக இருக்கிறது. அந்த கருப்புத்தான் அழகு. இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.தொடர்ந்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கருப்பு நிறத்தில் என்ன தவறு? கருப்பு நிறத்தை மதிப்புமிக்கதாகவும் அழகாகவும் வைத்திருப்பது முக்கியம். நான் வலுவாக வெளியே வர இதுவே நேரம். நான் வலுவாக வெளியே வருவதன் மூலம், இதேபோன்ற பாதுகாப்பின்மை மற்றும் போதாமை உணர்வுகளை அனுபவிக்கும் மக்கள், தாங்களும் அதற்கு மதிப்புள்ளவர்கள் என்றும், நமக்கு வெளிப்புற சரிபார்ப்பு தேவையில்லை என்றும் உணர இது உதவும். இவ்வாறு அவர் கூறினார்.இதனைத் தொடர்ந்து, சாரதா முரளிதரனுக்கு, மாநில எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.