திருவனந்தபுரம் : கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து, முதல்வரது இருக்கையில் அமர்ந்து தொலைபேசியில் அமைச்சர்கள் உட்பட பலரையும் அழைத்து தான் பிரதமர் எனக் கூறி, அதிகார தோரணையில் பேசிய நபரை, இரு அமைச்சர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தலைமை செயலகத்தில் மாநில முதல்வர் உம்மன் சாண்டி அலுவலகம் உள்ளது. தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் காலை அமைச்சரவை கூட்டம் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்குபின், அமைச்சர்கள் கே.பாபு மற்றும் கே.பி.மோகனன் ஆகியோர் முதல்வர் அறைக்கு வந்தனர். அப்போது முதல்வர் இருக்கையில் மர்ம நபர் அமர்ந்திருப்பதும், அவர் முதல்வரின் தொலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அமைச்சர்கள் அந்த நபரிடம் சென்று, 'யார் நீங்கள்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என கேட்டனர். அதற்கு அந்த நபரோ, 'நான் தான் பிரதமர். உங்களுக்கு என்னவேண்டும்? கேளுங்கள் தருகிறேன்' என, ஆங்கிலத்தில் பதில் அளித்துள்ளார்.
எரிச்சல் அடைந்த அமைச்சர்கள் அந்த நபரை பிடித்து, முதல்வரின் பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் கன்டோன்மென்ட் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்தது. பின்னர் அவரது உறவினர்களை வரவழைத்து போலீசார் விசாரித்ததில், அவர் உரியாக்கோடு கிராமத்தைச் சேர்ந்த செல்லம்-தங்கம் தம்பதியர் மகன் ஜோஸ், 40, என்பதும், ஆறு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்ததாகவும் தெரிந்தது.
அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை விடுவித்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் உம்மன் சாண்டி இவ்விஷயத்தை பெரிதுபடுத்தவேண்டாம் என்றும், மேலும், பாதுகாப்பு விஷயத்தில் தீவிரம் செலுத்தினால், பலருக்கும் இடையூறாக அமைந்து விடும் என்றும் தெரிவித்து விட்டார். இச்சம்பவம் தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இது பாதுகாப்பு விஷயத்தில் போலீசாரின் மெத்தனப்போக்கை காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.