மேலும் செய்திகள்
கேரள காங்., புதிய தலைவராக சன்னி ஜோசப் நியமனம்
10-May-2025
மாநில தலைவரை சமீபத்தில் மாற்றியது, கேரள காங்கிரசில் கோஷ்டி மோதலை மேலும் தீவிரமாக்கியுள்ளது. வரும் தேர்தல்களில் காங்கிரசுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.பல தலைவர்களை உருவாக்கிய காங்கிரஸ் கட்சியில், பல கோஷ்டிகள் இருப்பது என்பது தற்போது சர்வசாதாரணமானது. இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றாலும், கேரளாவில் நிலைமை மிக தீவிரமாக உள்ளது. எதிர்ப்பு
கேரள காங்கிரஸ் தலைவராக இருந்த கே.சுதாகரன் சமீபத்தில் மாற்றப்பட்டார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சட்டசபை தேர்தலில் கட்சி அடைந்த தோல்வியை தொடர்ந்து, மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டவர் தான் சுதாகரன்.அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நீலாம்பூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. அடுத்தாண்டு ஏப்., - மே மாதத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது.இந்த நேரத்தில் உட்கட்சி கோஷ்டி மோதல்களால், மாநில தலைவர் பதவியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு சுதாகரன் தள்ளப்பட்டார். கடும் அதிருப்தியுடனேயே அவர் வெளியேறினார்.புதிய தலைவராக சன்னி ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்துக்கு மாநில முன்னாள் தலைவர்கள் கே.முரளீதரன், முல்லபள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கட்சியின் தேசிய அமைப்புச் செயலராக உள்ள கேரளாவைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால், தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தனக்கென தனியாக கோஷ்டியை நடத்தி வரும் வேணுகோபால், தன் அதிகாரத்தை காட்டும் வகையில், இந்த மாற்றத்தை செய்துள்ளதாக, சுதாகரன் தரப்பினர் கூறுகின்றனர். பனிப்போர்
கட்சியின் மூத்த தலைவரும், செயற்குழு உறுப்பினருமான ரமேஷ் சென்னிதலா மவுனம் காக்கிறார். இதுவும் ஒரு அர்த்தத்தை காட்டுவதாக கூறப்படுகிறது.காங்கிரசை தொண்டர்களின் கட்சியாக மாற்றுவதாக உறுதியளித்திருந்தார் சுதாகரன். அதில் பெரிய வெற்றியை அவரால் பெற முடியவில்லை. கோஷ்டி மோதல்களை சமாளிப்பது, கட்சியில் உள்ள எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்துவதற்கே அவருக்கு நேரம் சரியாக இருந்தது.இதற்கிடையே, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான வி.டி.சதீசன் மற்றும் சுதாகரனுக்கு இடையேயும் பனிப்போர் நிலவி வந்தது. சில நேரங்களில் பரஸ்பரம் விமர்சித்து உள்ளனர். இவ்வாறு, கேரள காங்கிரசில் பல கோஷ்டிகள் உள்ள நிலையில், லோக்சபா எம்.பி., சசி தரூர், பயங்கரவாதத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை வெளிப்படையாக பாராட்டினார்.மத்திய அரசு வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ள எம்.பி.,க்கள் தலைமையிலான ஒரு குழுவையும் சசி தரூர் வழிநடத்துகிறார். ஆனால், அதை காங்கிரஸ் தலைமை ஏற்கவில்லை. இந்நேரத்தில், சசி தரூருக்கு ஆதரவாக சுதாகரன் கருத்து கூறியுள்ளார்.கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த கோஷ்டி மோதல்கள், வரும் தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பூனைக்கு யார் மணி கட்டுவது? - நமது சிறப்பு நிருபர் -
10-May-2025