உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முக்காடு அணிந்த பள்ளி ஆசிரியை ஹிஜாப் அணிந்த மாணவியை வெளியேற்றுவதா கேரள கல்வி அமைச்சர் விமர்சனம்

முக்காடு அணிந்த பள்ளி ஆசிரியை ஹிஜாப் அணிந்த மாணவியை வெளியேற்றுவதா கேரள கல்வி அமைச்சர் விமர்சனம்

திருவனந்தபுரம்: ''கிறிஸ்துவ அமைப்பு நடத்தும் பள்ளியில், தலையில் முக்காடு அணிந்த ஆசிரியை ஒருவர், 'ஹிஜாப்' அணிந்த மாணவியை வெளியேற்றியது முரண்பாடானது,'' என, கேரள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். கேரளாவின் கொச்சியில் உள்ள பள்ளுருத்தியில் கிறிஸ்துவ தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 8ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி, பள்ளிக்கு, 'ஹிஜாப்' எனப்படும், தலையை மறைக்கும் துணி அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவியை கண்டித்த பள்ளி நிர்வாகம், அவரை வீட்டுக்கு திருப்பி அனுப்பியது. இது குறித்து விளக்கமளிக்க மாணவியின் பெற்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களுடன், பள்ளிக்கு சென்ற எஸ்.டி.பி.ஐ., எனப்படும், இந்திய சமூக ஜனநாயக கட்சியினர், நிர்வாகத்தினரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பிற மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டதால், பள்ளிக்கு பாதுகாப்பு தர போலீசாருக்கு கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து மாநில கல்வித் துறை விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது: கிறிஸ்துவ அமைப்பு நடத்தும் பள்ளியில், தலையில் முக்காடு அணிந்த ஆசிரியை ஒருவர், ஹிஜாப் அணிந்த மாணவியை வெளியேற்றியது முரண்பாடானது; ஆச்சர்யமானதும் கூட. இந்த விவகாரத்தில், அரசு ஒரு பார்வையாளராக இருக்க முடியாது. எங்கள் விசாரணையில், பள்ளியில் சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

வெளியேற விரும்பும் மாணவி

பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கூறுகையில், 'இந்த சம்பவத்தால், எங்கள் மகள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். அதே பள்ளியில் மீண்டும் படிக்க விரும்பவில்லை. அவரை சேர்த்து கொள்ள வேறு சில பள்ளிகள் தயாராக உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, கிறிஸ்துவ பள்ளி எங்களை தொடர்பு கொண்டு எந்த சமாதானமும் செய்யவில்லை. மாணவியை மீண்டும் பள்ளியில் சேர்த்து கொள்வது குறித்து அப்பள்ளி முதல்வர் ஹெலீனா ஆல்பி கூறுகையில், 'எங்கள் மாணவி பள்ளியின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், அவளுக்கு கல்வி வழங்கவும், படிப்பை முடிக்க உதவவும் நாங்கள் முழு மனதுடன் தயாராக இருக்கிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !