பால் உற்பத்தி அதிகரிப்பதே கேரள அரசின் நோக்கம்
பாலக்காடு; நவீன முறைகளைப் பயன்படுத்தி பால் உற்பத்தியை அதிகரிப்பதே அரசின் நோக்கம் என, கேரள பால்வள மேம்பாட்டு மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சிஞ்சுராணி தெரிவித்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பிளாச்சிமடையில் இரு நாட்களாக பால்வள மேம்பாட்டு துறையின் சார்பில், மாவட்ட பால் பண்ணையாளர்கள் சங்கமம் ஒட்டி நடந்த மாநாட்டிற்கு, மின்சார துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி தலைமை வகித்தார்.மாநாட்டில் பால்வள மேம்பாட்டு துறை இயக்குனர் ஷாலினி திட்டங்கள் குறித்து விளக்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் பினு மோள், பால் உற்பத்தி நிறுவனமான 'மில்மா' தலைவர் மணி, சித்தூர் வட்டார ஊராட்சி தலைவர் சுஜாதா, பெருமாட்டி, வடகரைப்பதி, நல்லேப்பிள்ளி, கொழிஞ்சாம்பாறை ஊராட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.கேரள பால்வள மேம்பாட்டு மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சிஞ்சுராணி பேசியதாவது:நவீன முறைகளைப் பயன்படுத்தி பால் உற்பத்தியை அதிகரிப்பதே அரசின் நோக்கம். பால் பணியாளர்களுக்கும், பசுமாடுகளுக்கும் உள்ள காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். கால்நடைகளுக்கான காப்பீடு திட்டத்திற்கு, எட்டு கோடி ரூபாய் அரசு அனுமதித்து உள்ளது. கால்நடை காப்பீடு பாதி மானியத்தில் வழங்கப்படும். காப்பீடு செய்யப்படாத கால்நடைகள் இறப்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை நீக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு, அவர் பேசினார். மாநாட்டுக்குப் பின் அமைச்சர்கள், 'டெய்ரி எக்ஸ்போ' மற்றும் கால்நடை கண்காட்சியை பார்வையிட்டனர். கண்காட்சியை பால்வள மேம்பாட்டு துறை இயக்குனர் ஷாலினி துவக்கி வைத்தார். அதிக உற்பத்தித் திறன் கொண்ட 200 கால்நடைகள் கண்காட்சியில இடம் பிடித்திருந்தன.