கோல்கட்டா பெண் டாக்டர் விவகாரம்: மருத்துவமனை முன்னாள் ‛‛டீன் கைது
கோல்கட்டா: ஊழல் வழக்கில் கோல்கட்டா மருத்துவமனையின் முன்னாள் டீன் சந்தீப் கோஷ் இன்று ( செப்.02) சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார்.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் செயல்படும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, சஞ்சய் ராய் எனபவர் கைது செய்யப்பட்டார். கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, இந்த வழக்கை , சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.இதற்கிடையே, இங்கு பணியாற்றிய டீன் சந்தீப் கோஷூவிடம் சி.பி.ஐ., போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் மீது மருத்துவக் கல்லுாரி தொடர்பான ஒப்பந்தங்களை வழங்க சம்பந்தப்பட்டவர்களிடம் 20 சதவீதம் லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டார்.இந்நிலையில் சந்தீப் கோஷிடம் பல மணிநேரம் சி.பி.ஐ,. விசாரணை நடத்திய நிலையில், இன்று அவர் மீது ஊழல் வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.