காங்., கூட்டணியில் மீண்டும் குமாரசாமி?
பெங்களூரு : ''குமாரசாமி பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியே வருவார் என்று தெரிகிறது. மீண்டும் அவர் காங்கிரசின் கதவை கூட்டணிக்காக தட்டும் வாய்ப்பு உள்ளது,'' என, சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் விமர்சித்து உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கைவாரா தத்தையா நிகழ்ச்சியில், முதலில் பிரச்னை செய்தது நான் இல்லை. பா.ஜ., - எம்.பி., மோகனின் ஆதரவாளர் தான். பலிஜா சமூகத்திற்கு நிறைய பங்களிப்பு கொடுத்தது பா.ஜ., தான். காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்று, சமூகம் தொடர்பான நிகழ்ச்சியில் அரசியல் பேசினர். இதனால் கோபத்தில், இது உங்க அப்பன் வீட்டு நிகழ்ச்சி இல்லை என்று கூறினேன். அடிக்கடி பேச்சு
உங்க அப்பன் என்ற வார்த்தையை, எனக்கு பேச கற்றுக்கொடுத்தது பா.ஜ., தான். சட்டசபை கூட்டத்தொடரின் போது ரவி, எத்னால், விஜயேந்திரா, அசோக் ஆகியோர் தான் அடிக்கடி, 'இது உங்க அப்பன் வீட்டு சொத்து இல்லை' என்று பேசுவர். அவர்களே பார்த்தே நானும் பேசினேன். பிரதீப் ஈஸ்வர் மரியாதையாக பேச வேண்டும் என்று, மத்திய உணவு அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறி உள்ளார். மரியாதையாக பேசுவது எப்படி என்று பா.ஜ.,வினருக்கு அவர் சொல்லி தரட்டும். பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு நான் பகிரங்க சவால் விடுகிறேன். இதுவரை அவர்கள் செய்த பணிகள் குறித்து, அறிக்கை வெளியிட தயாரா. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருந்து, நான் செய்த பணிகள் குறித்து 1,000 பக்க அறிக்கை வெளியிட தயாராக உள்ளேன். சாக்லேட்
மத்திய அமைச்சர் குமாரசாமியை விமர்சித்து பேச வேண்டாம் என்று, சிலர் என்னிடம் கூறினர். தேவகவுடா குடும்பத்தின் மீது தனிப்பட்ட முறையில், எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் அரசியல் ரீதியாக நான் அமைதியாக இருக்க மாட்டேன். சிறு குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றுவது போல, குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து பா.ஜ., ஏமாற்றி உள்ளது. தேர்தலுக்கு முன்பு அவருக்கு முஸ்லிம் ஓட்டுகள் தேவைப்பட்டது. அவர்களை நல்லவர்கள் என்று கூறினார். தேர்தலுக்கு பின், முஸ்லிம்களை விமர்சித்து பேசுகிறார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் இப்படித்தான், சந்தர்ப்பவாத அரசியல்வாதி. குமாரசாமி பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியே வருவார் என்று தெரிகிறது. மீண்டும் அவர் காங்கிரசின் கதவை கூட்டணிக்காக தட்டும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.