கர்நாடக சாலை பணிகள் குறித்து கட்கரியுடன் குமாரசாமி சந்திப்பு
மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி நேற்று டில்லியில் சந்தித்துப் பேசினார். கர்நாடகாவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேச்சு நடத்தினார்.மத்திய நெடுஞ்சாலை துறை சார்பில் கர்நாடகாவில் மேற்கொள்ள வேண்டிய சாலைத் திட்டங்கள் பற்றி இருவரும் அரைமணி நேரத்திற்கு மேலாக உரையாடினர்.மாண்டியா, கோலார், சிக்கபல்லாபூர், சாம்ராஜ்நகர், மைசூரு ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது குறித்து குமாரசாமி விளக்கமாக எடுத்துக் கூறினார்.தான் எம்.பி., ஆக உள்ள மாண்டியாவில், தேசிய நெடுஞ்சாலை, புறவழிச் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது குறித்தும் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவது குறித்தும் இரவில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தாக இருப்பதையும் குமாரசாமி விளக்கினார்.குப்பம் - பங்கார்பேட்; கோலார் - சிந்தாமணி; சிந்தாமணி - சேலூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் விரைவில் நெடுஞ்சாலை அமைப்பதன் அவசியம் குறித்தும் நிதின் கட்கரியிடம் குமாரசாமி எடுத்து கூறினார். - நமது நிருபர் -