குமாரசாமியா... சிவகுமாரா...? ஒக்கலிகர் தலைவர் யார்?
கர்நாடகாவில் பலம் வாய்ந்த சமுதாயத்தினராக லிங்காயத், ஒக்கலிகர்கள் உள்ளனர். மாநிலத்தை ஆளுபவரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். லிங்காயத் சமுதாய தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை அச்சமுதாயத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். அது போன்று, தேவகவுடா, ஒக்கலிகர் தலைவராக கருதப்படுகிறார்.தொண்டர்களுடன் தொண்டராக பணியாற்றுவதாக அக்கட்சியினர் பெருமைப்படுகின்றனர். இதனால், தேவகவுடாவின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. அவரது மகனான குமாரசாமி இரண்டு முறை முதல்வராக பதவி வகித்தார். தற்போது மாண்டியா எம்.பி.,யாகி, மத்திய அமைச்சராக உள்ளார்.சமீபத்திய இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும், கட்சியை வழிநடத்திச் செல்லவும், ஒக்கலிகர் சமுதாயத்தினரை ஒன்று திரட்டவும், தேவகவுடாவும், குமாரசாமியும் திட்டம் வகுத்து வருகின்றனர். இது தொடர்பாக, பா.ஜ., தலைவர்களுடன் ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.புதுடில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்துள்ளனர்.ஒக்கலிகரின் முக்கிய தலைவராக விளங்கும், ராம்நகரை சேர்ந்த சிவகுமாரின் செயல்பாடு, மறைந்த எஸ்.எம்.கிருஷ்ணாவை ஈர்த்தது. இது நடந்தது, 2000ம் ஆண்டு. இதனால், காங்கிரசில், சிவகுமார் வேகமாக வளர்ந்தார். இன்று மாநில காங்., தலைவர், துணை முதல்வராக உயர்ந்துள்ளார்.மாநிலத் தலைவராக பதவியேற்ற பின், கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர, கட்சியின் அடிமட்ட தொண்டரையும் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்து வந்தார். இவரின் அணுகுமுறை, அச்சமுதாய தொண்டர்களையும் மிகவும் கவர்ந்தது. இதன் பலனாக, 2023 சட்டசபை தேர்தலில், கட்சிக்கு 135 இடங்கள் கிடைத்தன. 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு ஒன்பது இடங்கள் கிடைத்ததில் முக்கிய பங்காற்றினார்.சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலிலும், மூன்று தொகுதிகளையும் கைப்பற்றி, ஒக்கலிகர் சமுதாயத்தினரின் அசைக்க முடியாத தலைவர், நானே என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். தற்போது, முதல்வராகும் அனைத்து தகுதியுடன் சிவகுமார் வளர்ந்துள்ளார். - நமது நிருபர் -