பாட்னா : பீஹாரில், எதிர்க்கட்சியான காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியில், தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ள நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், கட்சி நிர்வாகிகளை அழைத்து தொகுதிகளை அறிவித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிருப்தி அடைந்த அவரது மகன் தேஜஸ்வி, உடனடியாக தலையிட்டதை அடுத்து, அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளில், 11ல், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. நவ., 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில், ஆளும் பா.ஜ., கூட்டணி - எதிர்க்கட்சியான காங்., கூட்டணி இடையே பலத்த போட்டி நிலவுகிறது. பா.ஜ., கூட்டணியை பொறுத்தவரை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியில் தொகுதி பங்கீடில் இழுபறி நீடிக்கிறது. இது தொடர்பாக, டில்லியில், காங்., தலைவர் கார்கே, ராகுல் ஆகியோருடன், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனும், பீஹார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று முன்தினம் பேச்சு நடத்தினார். எனினும் இதில் உடன்பாடு எட்டப்படவில் லை. இந்நிலையில், டில்லியில் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, பாட்னாவில் உள்ள தன் மனைவி ரப்ரி தேவியின் வீட்டுக்கு, நேற்று முன்தினம் இரவு லாலு பிரசாத் வந்தார். அப்போது அங்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள் கூடியிருந்தனர். அவர்களை அழைத்து பேசிய லாலு பிரசாத், தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளையும், அதன் வேட்பாளர்களையும் அறிவித்தார். 'சீட்' கிடைத்த நிர்வாகிகள், உற்சாகத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இது ஒருபுறமிருக்க, தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாததால், அதிருப்தியுடன், டில்லியில் இருந்து பாட்னாவுக்கு தேஜஸ்வி யாதவ் வந்தார். பாட்னா வந்ததும், தந்தை லாலு பிரசாத் யாதவ் தொகுதிகளை அறிவித்த தகவலை கேட்டு அவர் கடுப்பானார். நேராக வீட்டுக்குச் சென்ற தேஜஸ்வி, 'இன்னும் தொகுதி பங்கீடே முடியவில்லை. இழுபறியில் தான் உள்ளது. இந்த சூழலில் தொகுதிகளை அறிவித்தது கூட்டணிக்கு நல்லதல்ல' என, கடுமையாக குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, லாலு பிரசாத் யாதவின் அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இதனால், சீட் கிடைத்த நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர். லாலு பிரசாத் இப்படி செய்வது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போதும், கூட்டணி கட்சிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், ராஷ்ட்ரீய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியில் இதை கூட்டணி கட்சிகள் ஏற்றன. வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது பா.ஜ., பா.ஜ., - முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், தலா 101 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் கட்சிக்கு, 29 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. சொற்ப தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதால், பா.ஜ., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பீஹார் சட்டசபை முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும், 71 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை, ஆளும் பா.ஜ., நேற்று வெளியிட்டது. அதன்படி, துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர், முறையே தாராப்பூர் மற்றும் லக்கிசராய் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். பா.ஜ., மூத்த தலைவர் ராம் கிருபால் யாதவ் - டானாப்பூர்; பிரேம் குமார் - கயா; முன்னாள் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் - கதிஹார்; அலோக் ரஞ்சன் ஜா - சஹர்சா; மங்கள் பாண்டே - சிவான்; அனில் குமார் - ஹிஸ்வா தொகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2010 முதல் பாட்னா சாகிப் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டசபை சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரத்னேஷ் குஷ்வாஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். விரைவில், மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.