அரசியலுக்கும் குடும்பத்துக்கும் லாலு மகள் ரோகிணி முழுக்கு பீஹார் தேர்தல் தோல்வியால் அதிருப்தி
பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனருமான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, 46, அரசியலை விட்டும் குடும்பத்தை விட்டும் விலகுவதாக அறிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில், தங்கள் கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், இம்முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. பீஹாரில் உள்ள 243 சட்டசபை தொகுதி களுக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 202 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின், 'மஹாகட்பந்தன்' கூட்டணி, 34 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை தழுவியது. இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் படுதோல்விக்கு யார் காரணம் என்ற சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் கூறுகையில், 'நான் அரசியலை விட்டு விலகுகிறேன்; என் குடும்பத்தை விட்டும் விலகுகிறேன். தேஜஸ்வியின் மூத்த அரசியல் ஆலோசகராக கருதப்படும் சஞ்சய் யாதவும், என் கணவர் ரமீஸ் ஆலம் ஆகியோரின் ஆலோசனையின்படி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளேன். எல்லா பழிகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். லாலுவின் மற்றொரு மகனான தேஜ் பிரதாப் யாதவ், பொறுப்பற்ற நடத்தையின் காரணமாக கடந்த மே 25ம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது, அவர் பீஹார் தேர்தலில் தனிக்கட்சி துவங்கி போட்டியிட்ட நிலையில், தோல்வியைச் சந்தித்தார்.
ரோகிணி ஆச்சார்யா யார்?
ரா ஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலுவுக்கு மொத்தம் ஒன்பது வாரிசுகள். இவர்களில் ஏழு மகள்கள்; இரண்டு மகன்கள். இவர்களில் இரண்டாவது மகள் தான் ரோகிணி ஆச்சார்யா. தொழில்முறை டாக்டரான இவர், 2022ம் ஆண்டில் தன் தந்தை லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின்போது தன் சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். லாலுவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் யாதவ் இருவரும் அரசியலில் உள்ள சூழலில், ரோகிணியும் அரசியலில் குதித்தார். 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், சரண் தொகுதி எம்.பி., வேட்பாளராக போட்டியிட்டு, பா.ஜ.,வின் மூத்த தலைவர் ராஜிவ் பிரதாப் ரூடியிடம் தோல்வி அடைந்தார்.