UPDATED : நவ 02, 2024 04:02 PM | ADDED : நவ 02, 2024 03:57 PM
மும்பை: பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் அன்மோல் பிஷ்னோயை, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மும்பை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸேவாலா, மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உள்ளிட்ட பிரபலங்கள் கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு உள்ளது. இவனின் சகோதரன் அன்மோல் பிஷ்னோய். இவன் மீது 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலி பாஸ்போர்ட் மூலம் கென்யா தப்பிச்சென்று தற்போது அமெரிக்காவில் தங்கி உள்ளது தெரியவந்துள்ளது. பாபா சித்திக் கொலையிலும் இவனுக்கு தொடர்பு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சல்மான்கான் வீட்டின் முன்பு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தேடப்படும் நபராக இவனை மும்பை போலீசார் அறிவித்து இருந்தனர். இவன் குறித்து தகவல் தருவோருக்கு சன்மானம் தரப்படும் என தேசிய பாதுகாப்பு முகமை எனப்படும் என்.ஐ.ஏ., அறிவித்து இருந்தது.இந்நிலையில் மும்பை போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: அன்மோல் பிஷ்னோயை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை போலீசார் துவக்கி உள்ளனர். அவன் அமெரிக்காவில் உள்ளதை அந்நாட்டு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். நாடு கடத்துவதற்கான நடவடிக்கை குறித்து மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள போலீசார், அதற்கான ஆவணத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.அவனுக்கு எதிராகவும் 'ரெட் கார்னர்' நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.