கர்நாடகாவில் 12 அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்தா ரெய்டு!
பெங்களூரு: கர்நாடகாவில் அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தால் அவர்களது வீடுகளில், லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி நகை, பணத்தை பறிமுதல் செய்வது அவ்வப்போது நடக்கிறது. இந்நிலையில் சொத்து குவித்த, 12 அதிகாரிகள் வீடுகளில் நேற்று, லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.ஹாசனில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் முதல்நிலை உதவியாளராக வேலை செய்யும் ஜோதி மேரி; கலபுரகியில் விவசாய துறை உதவி இயக்குனர் துாலப்பா; சித்ரதுர்கா விவசாய துறை உதவி இயக்குனர் சந்திர குமார்.உடுப்பி வட்டார போக்குவரத்து அதிகாரி லட்சுமி நாராயண் நாயக்; பெங்களூரு மல்லசந்திரா மகப்பேறு மருத்துவமனை மருத்துவ அதிகாரி மஞ்சுநாத்; கர்நாடகா புறநகர் பகுதி உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக உதவி நிர்வாக பொறியாளர் ஜெகதீஷ் நாயக்.ஹாவேரி ராணிபென்னுார் வருவாய் இன்ஸ்பெக்டர் அசோக்; சவனுார் தாலுகா பஞ்சாயத்து அதிகாரி பசவேஷ்; அலமாட்டி பாலதண்டே கால்வாய் திட்ட ஜூனியர் இன்ஜினியர் சேத்தன்; கர்நாடக இடைநிலை கல்வி ஆணைய இயக்குனர் சுமங்களா. உணவு மற்றும் பொது விநியோக துறை ஜூனியர் இன்ஜினியர் நடுவினமணி; மெட்ரோ திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் சர்வேயர் கங்கமாரி கவுடா ஆகிய 12 அதிகாரிகளும், தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லோக் ஆயுக்தா ஐ.ஜி., சுப்பிரமணீஸ்வரர் ராவுக்கு தகவல் கிடைத்தன.வழக்குப்பதிவு அவரது உத்தரவின்படி, 12 அதிகாரிகள் வீடுகளிலும் நேற்று காலை 7:00 மணி முதல் இரவு வரை சோதனை நடந்தது. அதிகாரிகள் வீடுகளின் ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரு, தாவணகெரே, உடுப்பி, சித்ரதுர்கா, ஹாசன், பாகல்கோட் உட்பட எட்டு மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது.சோதனையின் போது அதிகாரிகள் வீடுகளில் இருந்து, கோடிக்கணக்கில் தங்க நகைகள், பணம் சிக்கியது. மேலும் சொத்துகளை வாங்கி குவித்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. வருவாய் இன்ஸ்பெக்டர் அசோக் வீட்டில் இருந்து, 1.35 கோடி ரூபாய் நகை, பணம் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.சொத்து குவித்த, 12 அதிகாரிகள் மீதும், அந்தந்த ஊர்களில் உள்ள லோக் ஆயுக்தா போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவாகி உள்ளது. விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பவும், லோக் ஆயுக்தா போலீசார் தயாராகி வருகின்றனர்.ஒரே நாளில், 12 அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி இருப்பது, சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.