தெற்கு டில்லியில் கொடூரம் காதலியை குத்தி கொன்றவர் கைது
பு துடில்லி:தெற்கு டில்லியில் உள்ள வீடு ஒன்றில், ஹரியானாவைச் சேர்ந்த நபர் ஒருவரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். பெண் நண்பரை கொன்ற வழக்கில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து, டில்லி தெற்கு போலீஸ் துணை கமிஷனர் அங்கித் சவுகான் கூறியதாவது: ஹிமான்சு, 25, என்பவர், பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். ஓக்லா என்ற பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த சாக் ஷி என்ற பெண்ணுடன் கோட்லா முபாரக்பூர் என்ற இடத்தில் உள்ள வாடகை வீட்டில், கடந்த ஆண்டு முதல் வசித்து வந்தார். ராஜஸ்தானில் சந்தித்த இருவரும், அதுமுதல் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றனர். வேறொரு நபருடன் சாக் ஷிக்கு தொடர்பு இருப்பதாக, ஹிமான்சு சந்தேகம் அடைந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் இருவருக்கும் இடையே அந்த விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே, வீட்டில் காய்கறி நறுக்க பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்து, அந்த பெண்ணை குத்திக் கொன்றார். பின், வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு, தப்பினார். நேற்று முன்தினம், 9:30 மணிக்கு தகவல் அறிந்த போலீசார், அந்த இடத்திற்கு சென்று, அந்த பெண் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, 250க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்த போலீசார், டில்லி அருகே பதுங்கியிருந்த ஹிமான்சுவை கைது செய்தனர். இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.